telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Saturday 5 October 2013

மகா பிராமணன்

  •  ‘காமக்குரோதங்களை விட்டொழிக்கிறவன் எவனோ அவனே மகாபிராமணன்' எனும் ஞானம் பேரரசன் கௌசிகனை விசுவாமித்திரனாக்குவது தான் இந்நாவலின் சாரம். பிராமணனாக வேண்டுமென்ற வேட்கையும் கூட காமம் தான் எனும் சிந்தனைத் தெளிவு நம்மையும் புடமிடுகிறது. 

  •       காம குரோதம் இல்லாதவனெனில் செருக்கு அறுத்தவன் என்றும், மரண துன்பத்திலிருந்து வசிஷ்டர் விடுபட்டது செருக்கை வென்றதால் தான் என இந்திரனே சொன்னபடியால், படைப்பின் இரகசியத்தை கண்டறிந்து விஸ்வாமித்திரனே ஒரு உலகைப் படைக்கும் ஆற்றலையும் பெற்றதெப்படி என உணர்த்தி நிற்கிறது நாவல். இதில் உபநிடதத்தின் இரகசியங்கள், காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைத்தும் அடங்கியுள்ளன. வேதகாலத்து உலகம் சமகால மொழியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தேவகன்னியர்கள் இவ்வுலகில் வந்து தவ சிரேஷ்டர்களோடு குடும்பம் செய்ததாக புனையப்பட்ட கற்பனையை மேஜிக்கல் ரியலிசம் என்பர் இக்கால இலக்கியவியலாளர்கள்.

  • வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்த கௌசிக மாமன்னன் அவரது உபசரிப்பின் அஸ்திவாரம் ஆசிரமப் பசுவான காமதேனுவின் வழித்தோன்றல் நந்தினி தான் என்றறிந்து அதனை தனக்காக தரும்படி வசிஷ்டரை வேண்ட, ‘உனக்குத் தேவையானதை தவத்தின் மூலம் பெற்றுக் கொள்' என்கிறார் வசிஷ்டர். அவர் மேலிருந்த அன்பு துவேஷமாகிறது அரசனுக்கு. அவனுக்கு ஈசனருள் பெறவேண்டிய மார்க்கத்தைக் காட்ட தன் சீடன் வாமதேவனைப் பணிக்கிறார் வசிஷ்டர்.

  • இயற்கையின் பாதையிலிருக்கிற தடையை அப்புறப்படுத்தி, அதன் செயல்பாட்டினை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பிராமணனின் தர்மம் எனவும், உலக நன்மைக்காக தவம் புரியும் பிராமணன் தனக்கு பிரியமானவற்றைக் கவனிக்கக் கூடாதெனவும், புலனாகாதவற்றிலிருந்து புலனறிவுக்கு வருகிற சக்தியை மையப்படுத்தி ஒருபுறமிருந்து பெற்றதை மறுபுறம் பரவலாக்கி உலகுக்கு தருகிற இயந்திரமாகிய பிராமணன் பிரியம், பிரியமற்றதற்கு அப்பால் இருப்பவன் என்றும் வாமதேவனையும் நம்மையும் தெளிவிக்கிறார் வசிஷ்டர்.

  •  தவப்பயனால் கிட்டிய சிவ அஸ்திரங்களை கௌசிகன் வசிஷ்டர் மேல் செலுத்த வெகு எளிதாக அவற்றை எதிர்கொள்கிறார் வசிஷ்டர். தனது பிரம்மதண்டத்தால் கௌசிகனின் பகைமனதை மாற்றுகிறார். தோல்வியால் துவண்ட கௌசிகனை வாமதேவன், தவமென்பது யாதென தெளிவிக்கிறான்.

  • “தத்தம் விருப்பங்கள் நிறைவேற யாரெல்லாம் என்னென்ன செய்கின்றார்களோ அதெல்லாம் தவமே.

  • மனமொரு விளக்கு கம்பம். ஒரே இடத்தில் குவித்தால் பிரகாசம் மிகுவது போல் மனதை ஒருநிலைப்படுத்த மனதின் அங்கங்களாக இருக்கிற பொறிகளைப் பிடிக்க வேண்டும். மனம் அலைபாயாதபடி பிடித்து நிறுத்தும் போது மையக்கோட்டில் சுழலும் பம்பரம் போல் நோக்கத்தில் சுழலும். பாம்பு பின் முகமாக சுற்றிக் கொண்டால் தலையானது வாலைப் பிடிப்பது போல் நோக்கம் நிறைவேற செய்யவேண்டியது மறுபுறம் பதிலாகக் கிடைக்கும். இதுவே தவத்தின் முதல் கட்டம்.

  • விதை மரமாவது போன்றதே தவம். காலம், இடம் பொருந்தினால் மட்டுமே சரியாகும். தன் நிலையைக் காப்பாற்றிக் கொண்டு, எதிர்வரும் நிலையை தனக்கேற்றபடி வடிவமைத்துக் கொள்ளப் போராடுவதே தவம்.

  • பாம்பாட்டி பாம்பை ஆட்டி வைப்பது போல, மனதை தன்போக்கில் வசப்படுத்திக் கொள்கிறவன் இந்த உலகை ஆட்டி வைப்பான்.

  •  நீ என்னவாக வேண்டுமென்பதை நிச்சயித்துக் கொள். அதற்கு உன் முயற்சியே சாதனை என நம்பு. முயற்சி சாஸ்திரத்தின் வழியாக நடைபெறுமானால், சிறிதளவு கொடுத்து அதிக அளவு நிரப்பிக் கொள்வதைப் போன்றது. அது சாஸ்திரத்துக்கு அப்பாற்பட்டதெனில், ஒரு படி அரிசி கொடுத்து மூன்று படி கேழ்வரகு வாங்குவது போலாகும்”.

  •  இவ்வுபதேசங்கள் வாமதேவனால் நமக்கும் சித்திக்கின்றன.

  • சத்திரிய குலத்தில் பிறந்த  விஸ்வாமித்திரர், தன் உடலோடு சொர்க்கம் புக விரும்பிய திரிசங்கு மன்னனுக்காக தனியாகவொரு சொர்க்கலோகம் படைக்குமளவு மகாபிராமணனாய் உயர்வடைந்ததை நாவல் ஊர்ஜிதப்படுத்துகிறது.

  • கன்னட இலக்கிய உலகில் சொல்லத்தக்க ஓரிடம் உண்டு தேவுடு நரசிம்ம சாஸ்திரிக்கு. (1896 - 1962) குழந்தை இலக்கியம், திரையுலகம், பத்திரிகையாளர், கல்வி பிரச்சாரம், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். அறுபதுக்கும் அதிகமான இவரது படைப்புகள் கன்னட இலக்கியத்தில் என்றும் அழியாதவை. மகா பிராமணன், மகா சத்திரியன், மகா தரிசனம் ஆகிய மூன்று நாவல்களும் போதும் இவரது பெருமையைப் பறைசாற்ற. இவரது கடைசி நாவலான மகா தரிசனத்தை வேதம் என்றே கூறலாம்.

  • இறையடியான் சாகித்ய அகாதெமிக்கு சர்வக்ஞர் உரைப்பா, சலங்கைச் சடங்கு, போராட்டம், அவதேஸ்வரி, புரந்தர தாசர் போன்ற நூல்களின் மொழிபெயர்ப்பால் நிலைத்த புகழுடையவர். இவர் மொழிபெயர்த்த பணியம்மா நாவல் கல்லூரிகளுக்குத் துணைப்பாட நூலாக உள்ளது. அவரது அனுபவமிக்க மொழியாக்கம் கன்னடத்தை தமிழுக்கு நெருக்கமாக்குகிறது.

  • நூல் பெயர்: மகா பிராமணன்
  • கன்னட மூலம்: தேவுடு நரசிம்ம சாஸ்திரி
  • தமிழாக்கம்: இறையடியான்
  • வெளியீடு : சாகித்ய அகாதெமி
  • பக்கங்கள்: 384
  • விலை: ரூ.180/-

No comments:

Post a Comment