telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Thursday 10 October 2013

ஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல!

எழுத்தாளர் திரு. சுந்தர்
ஜி ப்ரகாஷ் அவர்கள் ஆதி சங்கரரின் "பஜ கோவிந்தம்" என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் சுருக்கமாக மொழி பெயர்த்து அளித்திருந்தார். அதனை வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன.
முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் முன்னுரை நினைவுக்கு வந்தது. நான் மாணவனாக இருந்தபோது அந்த உரையை அவருடைய குரலிலேயே (மிமிக்ரி) பேசி பரிசு பெற்றிருக்கிறேன். "அத்வைத சித்தாந்தத்தை பரப்பிய ஆதி சங்கரர், பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டு பல ஆக்கங்களை அளித்திருக்கிறார்; அவற்றில் பஜ கோவிந்தமும் ஒன்று" என்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் இந்த அறிமுகத்தை தொடங்கி, அதன் முத்தாய்ப்பாக "Shri Sanakra has packed into the Bhaja Govindam song, the substance of all Vedanta, and set the oneness of Gnana and Bhakthi to melodious music" என்று இரத்தினச் சுருக்கமாக இந்தப் படைப்பை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
அங்கும் இங்கும் அலைபாயும் நம் "மூட" மனத்தின் அலங்கோலத்தைப் பற்றித்தான் அந்த ஸ்லோகங்கள் விவரிக்கின்றன. நிலையில்லாத இகலோக சுகங்களின் ஈர்ப்பு எப்படி நம் மனத்தை ஆக்கிரமிக்கிறது, அதனிலிருந்து மீள்வது எவ்வளவு முக்கியம் என்பது இந்த நூலின் அடிநாதமான கருத்து. ஓஷோ ரஜனீஷ் இதற்கு விரிவான உரை ஒன்றை அளித்திருப்பதாக அறிகிறேன். அதனையும் சின்மயானந்தாவின் உரையையும் வாசிக்கவேண்டும். That is part of my Ta-da list!
அந்த நூலின் பதினான்காவது ஸ்லோகம் மிகவும் சுவாரசியமானதாக மற்றும் சமகால நிதர்சனத்திற்கு ஒப்ப அமைந்திருக்கிறது. அந்த ஸ்லோகத்தை அப்படியே சமஸ்கிருதத்தில் அளிக்கிறேன்:
जटिलो मुण्डी लुञ्छितकेशः
काषायाम्बर बहुकृतवेषः |
पश्यन्नपि च न पश्यति मूढः
ह्युदरनिमित्तं बहुकृतवेषः ||
தமிழில்:
ஜடிலோ முண்டீ லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹு கிருத வேஷ:
பஸ்யன்னபி ச ந பஸ்யதி மூட:
ஹி உதர நிமித்தம் பஹு கிருத வேஷ:
இதன் சுருக்கமான தமிழாக்கம்:
போலி சாமியார்"சடை வளர்த்தவன், சிகையை மழித்தவன், காவித்துணி உடுத்தி வேஷம் போடுபவன்- இவர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்கள். இவர்களின் வேஷம் அத்தனையும் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்."
வேஷம் போடும் சாமியார்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். திருவள்ளுவரும் இதே கருத்தை:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
என்று "கூடா ஒழுக்கம்" என்னும் அதிகாரத்தில் இந்த வேஷதாரிகளை நமக்கு சுட்டியிருக்கிறார்.
வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் என்ற நிலையைத் தாண்டி தற்போது அது பணம் கொழிக்கும் பிசினஸாக மாற்றம் கொண்டுவிட்ட சூழலைத்தான் நாம் காண்கிறோம். இந்தத் தொழிலுக்கு "ஆன்மீகம் பண்ணுவது" என்று பெயர்! கொண்டு வந்து கொட்டுவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்!
வேதாந்த ரகசியங்களை ஒரு கற்றறிந்த குருவின் மூலமாக அறிய வேண்டும் என்று நமது சனாதன தர்மத்தின் நீதி நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைக்கு உள்ளது போல் பள்ளிக்கூடங்களோ கல்லூரிகளோ இல்லாத காலகட்டத்தில் அறிவிற் சிறந்தவராகக் கருதப்பட்ட ஒரு பெரியவரை குருவாக ஏற்று அவர் மூலம் கல்வி கற்பது அந்தக் கால முறை. அதனால் அந்த குருவிற்கு சமுதாயத்தில் ஏற்றமானதொரு படிநிலையை அளித்திருந்தனர்.
ஆனால் அந்த குரு ஒருவரின் தகப்பனாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஒருவருக்கு காயத்ரி மந்திரத்தை "பிரம்மோபதேசம்" செய்விப்பது அவர்தம் தகப்பன் தானே! மேலும் சமஸ்கிருதத்தில் "குரு" என்னும் சொல்லுக்கு தந்தை என்றும் பொருள் உண்டு. காளிதாசரின் ரகு வம்சத்தில் நான்காவது சர்க்கத்தின் முதல் பாடலில் "ச ராஜ்யம் குருணா தத்தம்…" என்று தகப்பனால் அளிக்கப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிற இடத்தில் "குரு" என்னும் சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.
அந்த "குரு" தான் இன்றைக்கு பல போலிகள் கைகளில் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது!
முற்றிலும் மாறுபட்ட இன்றைய சூழலில் நாமே புத்தகங்கள் வாயிலாகவும், இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் பலவற்றை கற்க முடிகிறது. அதுபோல் வேதங்கள், உபநிஷத்துக்கள் மற்றும் பல வேதாந்த நூல்களையும், தர்ம சாஸ்திரத்தையும் நாமே கற்றறிந்து கொள்ளக்கூடிய நிலை வந்து விட்டது. ஆனால் தற்போதும் பல போலி அறிவாளிகள் தங்கள் வாக் சாதுரியத்தாலும், கண்கட்டு வித்தைகளாலும் (hocus-pocus) மக்களை ஏமாற்றி, தாங்களே கடவுள் என்றும் கூறி நம்ப வைத்துக் கொண்டும் ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற பல போலிகளின் ஏமாற்று வேலைகள் அம்பலத்திற்கு வந்து அவர்கள் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டனை கூட அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் அதுபோன்ற போலிகளிடம் ஏமாறுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு புதுக் கவிதை வாசித்தேன்:
குருவே,
நீங்கள் வெறும் காற்றிலிருந்து
விபூதி எடுக்கிறீர்கள்
லிங்கம் எடுக்கிறீர்கள்
தங்கம் எடுக்கிறீர்கள்
ஆனால்
உங்களை ஜாமீனில் எடுக்க
முடியவில்லையே!
Properly structured validation process, peer review போன்ற திறனாய்வு முறைகள் நெறிப்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் துறைகளிலேயே பல டுபாகூர் விஞ்ஞானிகள் (charlatans) தோன்றி மக்களை ஏமாற்றி வரும் இன்றைய சூழலில் "மகராஜன் கப்பல், கொள்வதெல்லாம் கொள்ளும்" என்ற நிலையிலிருக்கும் ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் புகுந்து விளையாடலாம் தானே!
உலகம் உருண்டை என்று எல்லோரும் சொன்னால், அது தவறு என்றும் உலகம் உண்மையில் தட்டையாக, ஆனால் சிறிது உப்பலாக ஊத்தப்பம் வடிவத்தில் உள்ளது என்றும் ஒரு புது அறிவாளி சொல்ல ஆரம்பித்தால், அவனைச் சுற்றியும் பத்து பேர் கூடுவார்கள். அவன் உடனே தன் அறிவார்ந்த சொற்பொழிவுகளை வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மில்லியன் கணக்கில் கல்லா கட்டுவான்! இதுபோன்ற செயல்பாடுகளைத்தான் நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
மக்களிடம் "மந்திரத்தில் மாங்காய் காய்க்கவேண்டும்", முயற்சியேயில்லாமல் பலன் பெற வேண்டும் என்னும் ஷார்ட்கட் மனப்பான்மை பெருகியிருப்பதால் இது போன்ற போலி சாமியார்கள் ஆதிக்கம் லவலேசமும் குறையாது என்பது திண்ணம்!

No comments:

Post a Comment