telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Friday 21 February 2014

அருகம் புல் ரகசியங்கள்

அருகம்புல் ரகசியங்கள்



ஆல்போல் தழைத்து அருகு (அறுகு) போல வேரூன்ற வேண்டும் என்று தமிழர்கள் வாழ்த்துவதை அறிவோம். ஆலமரம் மிகப்பெரிய மரமாக வளர்ந்து விழுதுகள் மூலமாக காலம் காலமாக வாழ்வதை நாம் அறிவோம் (காண்க எனது முந்தைய கட்டுரை: இந்திய அதிசியம்- ஆலமரம் )

வரலாறு, தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி ஒரு அரிய தகவலைத் தருகிறார்: அருகம் புல், புல் வகைகளில் அரசு போன்றது. ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ எணன்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’ (பக்கம்26, யாவரும் கேளிர், டாக்டர் இரா நாகசாமி)


அருகம் புல் ரகசியங்களை இந்துக்கள் ஆதியிலேயே அறிந்திருந்தனர். நெல்லும் புல்லும் ஒரே வகைத் தாவரம் தான். ‘கிராமினே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த 11,000 வகைத் தாவரங்களில் தர்ப்பைப் புல்லுக்கும் அருகம் புல்லுக்கும் மட்டுமே தனி இடம் கொடுத்தனர். பிள்ளையாருக்கு ஏற்றது அருகம் புல். நவக் கிரக ஹோமங்களில் கேது கிரகத்துக்கு சாந்தி செய்யும்போது அருகம் புல்லை ஹோமத் தீயில் இடுவர். கேது கிரகத்துக்குப் பிள்ளையார் அதி தேவதை.

மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் அருகம்புல்லையும் சாணியில் நட்டுவைப்பர். அருகம் புல் இருந்தால் சாணியில் புழுப்பூச்சிகள் வராது. அருகம் புல்லுக்கு வடமொழியில் தூர்வா என்று பெயர். இப் பெயர் கணபதி மந்திரங்களிலும் உபநிஷத்திலும் வருகிறது. பிள்ளையாரை தூர்வாப் ப்ரியாய நம: என்று சொல்லி வழிபடுவர்.

2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் இலக்கியத்திலோ தொல்காப்பியத்திலோ ‘சிவன்’ என்ற சொல்லே கிடையாது. அதே போல பிள்ளையார் பற்றிய குறிப்பும் கிடையாது. ஆனால் கபிலர் என்ற பிராமணப் புலவரின் பெயர் ரிஷி முனிவர்களுக்கும் உண்டு. பிள்ளையாருக்கும் உண்டு. பகவத் கீதையில் கண்ணபிரான் (9-26) ‘எனக்கு பத்ரம் புஷ்பம், பலம் தோயம்= இலை, பூ, பழம், தண்ணீர்’ எதைக் கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார். இதையே கபிலரும் (புறம் 106)

‘’புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா’’ என்று கூறுகிறார்.

புல், இலை, எருக்கு ஆகிய எதைப் போட்டு பூசித்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லாது என்று கபிலர் கூறியதை எனது ‘’புறநானூற்றில் பகவத் கீதை’’ என்ற கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இங்கு பிள்ளையாரின் ஒரு பெயரான ‘’கபிலர்’’ என்ற பெயரைக் கொண்ட புலவர், புல், இலை, எருக்கம் என்று கூறுவதைப் பார்த்தால் இது மூன்றும் பிடித்த ஒரே கடவுள் பிள்ளையார்தான்!

புல் என்பது அருகம் புல்லையும், பத்திரம் என்பது விநாயகருக்குப் பிடித்த 21 வகை இலைகளையும், எருக்கம் என்பது எருக்கம் பூவையும் குறிக்கலாம்.

மாணிக்கவாசகர் புல்லாகிப் பூண்டாகி என்று பாடுவதிலும் பொருள் உளது. இன்னொரு உண்மை என்னவென்றால் இறந்தவன் மறுபிறப்பு எடுப்பது எப்படி என்று கூறும் உபநிஷத்துகள் நமது ஆன்மா மழை மூலம் புல்லை அடைந்து, பசுவின் வயிற்றை அடைந்து பாலாக மாறி தாயின் வயிற்றில் கரு மூலமாகப் புகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டியது.

பாம்பு- கீரி சண்டை மர்மம்

பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.

அருகம் புல் பெயரிலேயே சக்தி கொடுக்கும் சூரியன் பெயரும் (அருகன்) இருக்கிறது. அருகன்=சூரியன்=ஆர்கோஸ் (கிரேக்கம்)= பர்கோ தேவஸ்ய( காயத்ரி மந்திரம்) எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய சொற்கள்.

இலங்கை மக்களும் நாட்டார் சமூகத்தினரும் அருகின் பெருமையை நன்கு அறிவர். இலங்கையில் குழந்தைகளுக்கு ‘’பால் அரிசி’’ வைப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகளுக்கு பாலில் அருகம் புல்லைத் தோய்த்து வாயில் விடுவர்.

கல்யாண காலங்களில் மணமக்களை வாழ்த்தி அருகரிசி போடுதலும் உண்டு.

மருத்துவ குணங்கள்

மிருகங்களில் பலம் வாய்ந்ததும், வேகம் மிக்கதும், பலன் தருவதும் சாக பட்சிணிகள் தான்; அதாவது சைவ உணவு சாப்பிடுபவையே; .யானை, குதிரை, காண்டாமிருகம், பசு ஆகிய அனைத்தும் சைவ உணவு, குறிப்பாக அருகம் புல் முதலியனவற்றை சாப்பிடுபவை. குதிரை, முயல், காட்டுப் பன்றி ஆகியன அருகம் புல்லை விரும்பிச் சாப்பிடும். இவை அனைத்தும் அபார வேகம் மிக்கவை. அத்தனைக்கும் அருகம் புல் ‘பெட்ரோல்’ மாதிரி.

நோய் வந்தால் பூனை, நாய், கோழி ஆகியன கூட அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைக் காணலாம்.

அருகம் புல் பற்றிய புராணக் கதையும் கூட அதன் குணத்தைக் காட்டும். அனலாசுரன் என்பவன் நல்லோர் அனைவர்க்கும் துன்பம் செய்தான். எல்லோரும் பிள்ளையாரை வேண்டவே அவர் அனலாசுரனை விழுங்கிவிட்டார். பெயருக்கு ஏற்றவாறே அவன் அவர்க்கு வயிற்றில் அனலை உண்டாக்கி எரிச்சல் தரவே, பிள்ளையாரும் அருகம் புல்லைச் சாப்பீட்டே குணம் அடைந்தார்.

அருகம் புல் சாற்றை காலையில் அருந்துவது நல்லது. இது மலச் சிக்கல், உடலில் உள்ள விஷம் ஆகியவற்றை நீக்கும்.தோல் நோய்கள், மார்பு, நுரை ஈரல் தொடர்பான நோய்கள், ஜனன உறுப்புகள் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

ஜெர்மனி போன்ற நாடுகளில் புல் சாற்றைக் கலந்தும் ரொட்டி செய்கிறார்கள். மக்கள் அதை விரும்பி வாங்குகிறார்கள். நாமும் அருகம் புல் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றை செய்யலாம். புல் வகைகளை உணவாக உட்கொள்ளுதல் பற்றி தனி புத்தகமே ஆங்கிலத்தில் இருக்கிறது. ஒரு வேளை ஆங்கிலப் புத்தகத்தில் ஆங்கிலேயர் சொன்னால் தான் நம்மவர்களுக்குப் புரியும் போல இருக்கிறது.

பிரதமர் இந்திராகாந்தி வெளிநாட்டுக்குச் சென்றபோது அவருக்கு பரிசாக அளித்த கம்பளம் இந்தியாவில் செய்யப்பட்டது (மேட் இன் இண்டியா) என்று எழுதப்பட்டதை அவரே ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.அது போல அருகம்புல்லும் ‘பாரீன்’ சரக்காக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அபிதான சிந்தாமணி தரும் தகவல் (பக்கம் 109)

அறுகு: ஒரு விதமான பூண்டு. இதைக் கஷாயம் செய்து மிகவும் விருப்பமான உருசியுள்ள, குளிர்ச்சியுண்டாக்குகிற குடிநீராக உபயோகப் படுத்துகின்றனர். இது உப்பறுகு, கூந்தலறுகு, சிற்றறுகு, புல்லறுகு, பேரறுகு, பானையறுகு, வெள்ளறுகு என பேதப்பட்டு குணங்களும் மாறுபடும். இது தேவர்கள் பொறுட்டு அநலாசுரனை விநாயகர் விழுங்கிய காலத்து வெப்பம் தணிவுற முனிவர் பூசித்தலாலும், விரோசனையால் விநாயக மூர்த்தி பசியாக வந்த காலத்திற் பசி தணிய நிவேதிக்க இட்டமையாலும், ஆசிரியை எனும் ரிஷி பத்தினியால் தேவேந்திரனிடம் துலை ஏறப்பெற்றுத் துலையில் தேவேந்திரன் செல்வத்தினும் உயர்ந்தமையாலும், தருப்பையில் ஒன்றாதலாலும் ஏற்றமுடைத்தாம் (விநாயக புராணம்) துலை= தராசு
Infromation from : http://tamilandvedas.wordpress.com/
Contact: swami_48@yahoo.com

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

No comments:

Post a Comment