அம்பிகை சிதக்னி குண்டத்தில் தோன்றியவள். தேவர்களின் கார்யங்களைச் சிறப்பாகச் சாதிப்பதற்காகவே அவள் இவ்வாறு தோன்றினாள். இவ்வாறு சிதக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையை எரியோம்பி வழிபடுவதே “சண்டிஹோமம்” போன்றன.
இவ்வாறாக, யாககுண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்று எழும் ஶ்ரீசக்கரத்தின் உச்சியில் உள்ள பிந்துவில் அன்னையானவள் பரசிவனின் மடியில் எழுந்தருளியிருக்கிறாள். அவளிடமிருந்து அவனையும், அவனிடமிருந்து அவளையும் பிரிக்க இயலாது.
“மூவர்க்கும் முற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனதிற்கும் நாடரிய பேரறிவாய்
தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும் எழில் பரையை வணங்குவாம்”
என்று அபிராமி பட்டர் போற்றுவது போல, எழில் பரையாக, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழையவளாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையளாய் அவள் அங்கே காமேஸ்வரியாக எழுந்தருளியிருக்கிறாள். இவ்வாறு காமேஸ்வரன் திருமடியில் எழுந்தருளியிருக்கும் அன்னை மஹாத்ரிபுரசுந்தரியானவள் நான்கு கரங்கள் கொண்டருள்கிறாள். அங்குசமும் பாசமும் பின்னிரு கரத்திலும் கரும்பும், பஞ்சபாணங்களும் அவளின் முன்னிரு கரத்திலும் மிளிர்கின்றன.
அப்போது, வரமருளவும் அபயம் தரவும் கரங்கள் இல்லையே என்றால், அப்பணிகளை அவள் திருவடிகளே அநாயாசமாகச் செய்தருள்கின்றன என்பது சக்தி உபாசகர்களின் நம்பிக்கை.
பிரபஞ்ச நாயகி பரம்பொருள் விமர்சனம் என்ற கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போது அப்பரம்பொருளுக்கே “அஹம்பாவம்” ஏற்பட்டு விடுகிறதாம். அப்போது அப்பரம்பொருள் காமேஸ்வரராகிறார். அம்பிகையோ, காமேஸ்வரி ஆகிறாள்.
இதன் போதே, பிரபஞ்சம் உருவாகிறது. இக்காமவல்லியை உபாசிக்கும் மரபே ஶ்ரீவித்யையாகும். ஶ்ரீவித்யையின் முக்கிய இடத்தை ஶ்ரீசக்கர உபாசனை பெறுகிறது என்பர்.
ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.
சிவானந்தப் பேறருளி முக்தி தருபவள்
சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.
ஆக, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.
“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே– (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”
அறுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.
செம்மை சார் மரபின் வழியே ஶ்ரீ சக்கரபூஜை
அம்பிகையை ஶ்ரீசக்கரம் என்ற யந்திரத்தின் நடுவில் பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.
பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.
அடுத்துப் பூஜை செய்பவர் தமது பௌதீக உடலை மந்திரங்களின் மூலம் தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும் வழிபாட்டையாற்ற வேண்டும். இதன் பின், தெய்வீகச் சரீரமெங்கும் தேவர்களை ஆவாஹித்துத் தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத் தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.
உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்டபின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கரபூஜையினுள் நுழைகிறார். ஶ்ரீசக்கரபூஜையில் பாத்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கலசபாத்திரம், சாமான்யார்க்கிய பாத்திரம், குரு பாத்திரம், சுத்தி பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், அலி பாத்திரம், பலி பாத்திரம், ஆத்மபாத்திரம், இவ்வாறாக அப்பாத்திரங்கள் பல்திறத்தன.. அவை பூஜையின் ஒவ்வொரு நிலைகளில் சாதகனால் பாவிக்கப்பெறுகிறது.
உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்.
சதுஷ்ஷஷ்டி உபசாரங்கள் என்ற அறுபத்து நான்கு உபசாரங்களை அன்னைக்கு வழங்கிப் பூஜித்து, அம்பாளைச் சுற்றி எட்டெட்டு வரிசையில் சேரும் ஆவரண சக்திகளை பூஜிப்பர். இது பரிவாரார்ச்சனை என்று குறிப்பிடப்பெறும். நிறைவாக, நவாவர்ணபூஜையும், லலிதா சஹஸ்ரநாம அல்லது திரிசதி நாம அர்ச்சனையும், நைவேத்தியத்துடன் விசேட பூஜையும் செய்வர். அதன் பின் பலிதானம், சுவாஸினீ பூஜை என்பவற்றினையும் ஆற்றுவர்.
எம் தாயே, நாயோம் தவறே செய்யினும் பொறுத்தருள வேண்டும்.. என்று விண்ணப்பம் செய்து பூஜாபலனையும் நிறைவில் அன்னையின் வரதஹஸ்தம் என்ற வரமருளும் இடது திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பெற்று ஶ்ரீசக்கரபூஜை நிறைவு பெறும்.
ஶ்ரீ சக்கர உபாசனையில் பயமும், பயனும், அருளும்.
ஆதிசங்கரபகவத்பாதர் ஶ்ரீ சக்கரவழிபாட்டை சீரமைத்துப் பரவச் செய்தார் என்பது நம்பிக்கை. ஶ்ரீ வித்யோபாசனை என்று போற்றப்பெறுகிற ஶ்ரீசக்கர வழிபாடு இன்று சக்தி வழிபாட்டாளர்களிடம் சிறப்புற்று விளங்குகிறது.
ஆதிசங்கரபகவத் பாதர் சிருங்கேரியில் ஶ்ரீ சக்கரத்தின் மீது சாரதா தேவியைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்லுவர். காஞ்சியில் காமகோடி பீட வாசினியாக எழுந்தருளியிருக்கிற அன்னை காமவல்லி முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீ சக்கரபூஜை செய்திருக்கிறார். சிதம்பரத்தில் ஆடவல்ல பெருமானின் வலப்பக்கத்தில் சிவசக்கரமும் சக்தி சக்கரமும் இணைந்து சம்மேளனமாக இருக்கிறது. இதனையே சிதம்பர ரகசியமாக வழிபடுகிறசிறப்பும் அமைந்திருக்கிறது. அன்னை சிவகாமி சந்நதியில் சிறப்பான ஶ்ரீ சக்கரம் ஒன்று அமைந்திருப்பதாகவும் குறிப்பிடுவர்.
திருக்குற்றாலத்தில் ஶ்ரீ சக்கரபீடம் இருப்பதாயும், திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் அம்பாள் சந்நதியில் ஶ்ரீ சக்கரமே பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப்பதாகவும் (அம்மைக்கு இங்கு திருவுருவம் இல்லை) திருவானைக்காவில் அகிலாண்டநாயகியின் காதணிகளில் ஶ்ரீ சக்கரம் பொறிக்கப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுவர். இவ்வாறாக, தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவஸ்தலங்களிலும் அன்னையின் ஶ்ரீசக்கரம்சிறப்புடன் வழிபாடு செய்யப்பெற்று வருகிறது.
ஶ்ரீ வித்யா உபாசனையை நன்கு நெறிப்படுத்தியவர்களில் ஆதிசங்கர பகவத்பாதர், வித்யாரண்யர், நீலகண்டர், பாஸ்கரராஜர் ஆகியோர் முதன்மை பெறுகின்றனர்.
ஶ்ரீ சக்கரம் கைலாசப்பிரஸ்தாரம், மஹாமேருப்ரஸ்தாரம், அர்த்தமேரு பிரஸ்தாரம், பூபிரஸ்தாரம் எனப்பலவகை உண்டென்பர். இலங்கையில் பல பெரியவர்களுடன் பேசியதில் சிலர் ஶ்ரீ சக்கர வழிபாடு பற்றி சிறிது அச்சம் கொள்கின்றனர். தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய வழிபாடு என்றும் விதி முறை வழுவாது செய்ய வேண்டிய வழிபாடு என்றும் இது குறித்து அவர்களின் அச்சம் இருக்கிறது.
இன்னொரு நூலொன்றில் படித்ததில் அதில், ஶ்ரீ சக்கிரோபாசனையைச் செய்பவர்கள் மனச்சலனம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் திரிபுரசங்காரத்தின் பின் திரிபுராரியான பரமேஸ்வரனே ஶ்ரீ சக்கர ரூபிணியாக, தேவியாக இருக்கிறார் என்றும் கண்டிருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது ஶ்ரீ சக்கரபூஜை பலராலும், பல நிலைகளிலும் சுருக்கமாகச் செய்யப்பெறக் காண்கிறேன். அங்கெல்லாம் பெரியளவில் ஆசார மரபுகள் பேணப்படுவதாகவோ, அச்சம் கொள்வதாகவோ, தெரியவில்லை.. கடைகளிலும் சிறியனவாயும், பெரியனவாயும் பல ஶ்ரீசக்கரங்கள் விற்பனைக்கு இருக்கக் கண்டேன்.
வழமையான யந்திரங்களில் எழுத்துக்கள் நிறைய இருக்கும். ஶ்ரீசக்கரத்தில் எழுத்துக்கள் இருப்பதில்லை. ஸ்ரீ சக்கரம் பண்டைய இந்துக்களின் பாரத நாட்டினரின் கேத்திரகணித அறிவையும், ஆற்றலையும், விஞ்ஞான உணர்வையும் காட்டுவதாயும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சக்கர ராஜாவாக இருப்பதால் ஶ்ரீசக்கரத்தை சக்ரராஜம் என்றும் போற்றுவர்.
தத்தாத்திரேயர் வழி நின்று பரசுராமர் ஶ்ரீவித்யையைக் கற்றுப் பரப்பிப் பின் தன் சீடரான ஸமேதஸ் வழியே நமக்கு இன்று கிடைத்திருக்கிற நூலாகப் பரசுராம கல்பத்தைக் குறிப்பிடுவர். இதன் வழியே இன்றைய தென்னகத்துச் ஶ்ரீசக்கர வழிபாடுகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது.
சீராக முறைப்படி ஶ்ரீவித்யையை அனுசரித்து ஶ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரஹஸ்யங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறுவார் என்று குறிப்பிடுவர். பாஸ்கரராஜர் போன்ற முக்கிய ஆச்சார்யார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர்.
ஆக, சக்கரசக்தியாக நின்றருளும் அன்னையை பற்றிய சிந்தனைக்கு வித்திட்டு, இச்சாரதா நவராத்திரிப் புண்ணிய காலத்தில், இது தொடர்பான சிந்தனை பெருகப் பிரார்த்திக்கிறோம்.
No comments:
Post a Comment