telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Friday, 4 October 2013

அனந்த விரத மகிமைக்கதை


வாழ்க்கையில் பொருள் இழப்பு ஏற்பட்டால் அனைவருக்கும் மனதில் சொல்ல முடியாத சங்கடம் தான் ஏற்படும். அந்த சங்கடம் விலகி குடும்பத்தில் மீண்டும் ஒரு வசந்தம் வந்திட விரதங்கள் வரிசையில் சொல்லப்பட்ட சக்திவாய்ந்த விரதம் தான் அனந்த விரதம். வருகிற 18-ந் தேதி (புதன்கிழமை) இந்த விதரத தினமாகும். 

பகவான் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே இந்த விரதத் தின் சிறப்பைப்பற்றி தர்மபுத்திரருக்கு எடுத்துக் கூறி புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுபவர்களுக்கு ஆனந்த மயமான தருணங்களைத் தருவதாகக் கூறி அருளினார். 

அகத்தியமா முனிவர், திலீபன், பரதன், அரிச்சந்திரன் ஜனகன் முதலியவர்கள் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து தாங்கள் இழந்த நாடு நகரம் பொருட்களைத் திரும்பப் பெற்றனர். 

யாருக்குக் கணவன் வீட்டை விட்டுச் சென்று திரும்பி வராமல் வருந்துகிறார்களோ அவர்களும், வீடு, சொத்து, சொந்தங்களை இழந்து தவிக்கிறார்களோ, அவர்கள் இந்த விரதத்தால் பூரணபலனைப் பெறலாம். பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது என்று சிவபெருமான் தவிர்த்த தாழம் பூவை இந்த விரத பூஜையில் பயன்படுத்தலாம். 

அனந்த விரத மகிமைக்கதை: 

வசிஷ்ட மகரிஷியின் பரம்பரையில் உதித்தவர் தான் சுமந்தர். அவரது திறமையைக்கண்ட ப்குரு முனிவர் தன் மகள் தீட்சாவைத்திரு மணம் செய்து வைத்தார். இல்லரத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு ஷீலா என்ற பெண் குழந்தை பிறந்தது. முற்பிறவி கர்மவினையின் காரணமாக அன்பான கணவனையும், ஆசைகளோடு வளர்த்த குழந்தையை விட்டுக் காலமாகி விட்டாள். 

தன் குழந்தையை வளர்க்கவும் கிரஹஸ்தாச்ரம தர்மத்தினைக் காக்கவும் கன்யகா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் சுமந்தர். இரண்டாவதாக வந்த தாய் மிகவும் கொடூர குணம் உடையவளாகிடவே, ஷீலா தன் தாயைப்போல நல்ல குணம் உடையவனாக விளங்கினான். திருமண வயதை எட்டிய ஷீலாவை கௌடில்யர் என்ற ஆண் மகனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். 

புகுந்த வீட்டிற்குக் கிளம்பிய ஷீலாவுக்கு எந்த சீதனப் பொருட்களும் கொடுத்தனுப்பாமல் இரண்டு சத்துமாவு உருண்டைகளை மட்டும் கொடுத்து வழியனுப்பி விட்டாள். மனவருத்தம் அடைந்த சுமந்தர். இவனைப் பெற்ற தாய் இங்கிருந்தால் வெறும் கையோடு அனுப்புவானா? என்று கலங்கினார். 

ஷீலாவும் தன் விதி அதுவானால் என்ன செய்வது என்று எண்ணி புறப்பட்டாள். போகும் வழியில் ஒரு ஆற்றங்கரை தென்படவே அங்கு சில பெண்கள் தனித்தனியாக ஏதோ பூஜை செய்வதைக் கண்டு அவர்களை நெருங்கி, இது என்ன பூஜை செய்கிறீர்கள்? என்று கேட்க அப்பெண்கள் அனந்த விரத பூஜையைப் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். அதை பக்திப் பெருக்கோடு கேட்டபடி சிலரிடம் பொருள் சேகரித்து வந்து பூஜையைத் தொடங்கினாள். 
எல்லாமே பதினாங்காக: 

அனந்த விரத பூஜையில் எல்லாப் பொருட்களும் 14 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதனால், பதினான்கு ஆண்டுகள் இந்த விரதத்தைத் தொடர்ந்து செய்வது என்ற முடிவோடு எல்லாவற்றையும் பதினான்கு என்றபடி செய்து வந்தாள். 

ஐதீகப்படி கோதுமை மாவில் வெல்லத்தைக் கலந்து அதில் 28 பாகங்கள் பிரித்துப் பதினான்கு பாகங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தாள். ஷீலா இப்படிச் செய்து கொண்டிருக்கும் போதே அனந்தரின் அருள் கிடைந்து ஆனந்தம் கொடுக்கும் செல்வங்களை ஒவ்வொன்றாகப் பெற்றாள். 

செல்வநிலை உயர்ந்து விட்ட போதும் விரதத்தை விடாமல் செய்து வந்தாள். ஆனால், செல்வங்கள் அனைத்தும் சேர்ந்துவிட்ட நிலையில் ஷீலாவின் கணவர் கௌண்டின்யருக்கு ஆணவம் தலைக்கு ஏறிக் கொண்டது. ஒருநாள் ஷீலாவின் கையில் கட்டியிருந்த மஞ்சள் கயிறைக்கண்டு இதென்ன அசிங்கமாக உள்ளதுப என்று அதை அறுத்து எரியும் தீயில் போட்டார். 

பதறிப்போன ஷீலா, அடடா இந்தக் கயிறு அனந்தரின் வடிவமாயிற்றேப என்றபடி பாலில் போட்டு விட்டாள். இதனால் நாட்கள் செல்லச் செல்ல கௌண்டின்யரின் செல்வங்கள் எல்லாம் குறைந்துவிட்டது. கொட்டிலில் கட்டி இருந்த கறவை மாடுகள் அனைத்தும் திருடர்களால் கவர்ந்து செல்லப்பட்டன. 

வீடு ஒருநாள் தீயில் கருகிச் சாம்பலாகிவிட மழை பெய்தால் அமர்ந்திட, இடம் இன்றி இருவரும் தவித்தனர். உறவினர்கள் எல்லாரும் இவர்கள் நிலையைக் கண்டு கேலியும் கிண்டலும் செய்தனர். மனம் வருந்திய கௌண்டின்யர் அனந்தனே! காப்பாய் தவறு செய்து விட்டேன் நீ எங்கே இருக்கிறாய் என்று அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினார். 

தனது இருப்பிடத்திலிருந்து புறப்பட்ட கௌண்டியர்கள் வழியில் காண்பவர்கள் எல்லோரிடமும் அநந்தனைக் கண்டீர்களா? என்று விசாரிக்கத் தொடங்கினார். கடைசியில் ஒரு திருமாளிகைக்கு சென்றார். 

அதனுள் சென்றதும் பலவிமான பொன்மணிகள் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ரத்தின சிம்மாசனத்தில் கருட வாகனத்தின் மேல் சங்கு சக்கரம் ஏந்தியபடி அனந்தன் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அவர் காலடியில் விழுந்து வணங்கினார். 

பகவான் அனந்தன் அவரை வாழ்த்தி முதலில் தர்மசிந்தனை ஏராளமான பொருட்செல்வம், வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று பெரிய வரங்களைக் கொடுத்தார். இதைக்கேட்ட கௌண்டின்யர் இப்பிறவியில் தங்கள் தரிசனம் கிடைத்த நான் பாக்கியசாலி ஆவேன் என்று வணங்கி தன் வாழ்நாள் முழுவதும் மனைவி சீலாவுடன் சேர்ந்து அனந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பட்டுக் கயிறைக் கட்டிக் கொண்டார். 

இதனால் அவருக்கு சகல போக பாக்கியங்களும், செல்வங்களும் வந்து சேர நீண்ட காலங்களுக்கு வாழ்ந்ததோடு இருக்கும் வரை தான தர்மங்களைச் செய்து ஒரு புகழ் மனிதனாக வாழ்ந்தார். 

விரதபூஜை செய்யும் முறை: 

பூஜைக்குத் தேவையான துளசி, மலர்கள் ஐந்து விதமான பழங்கள் சர்க்கரை, அன்னம், புளிசாதம் வைத்துக் கொண்டு முதலில் விநாயகரை மஞ்சள் பொடியில் செய்து அருகம் புல்லால் வழிபட வேண்டும். 

ஓம் வேழமுகத்தவா போற்றி, 
ஓம் வெள்ளைக் கொம்பனே போற்றி! 
ஓம் சிவசக்தி மைந்தனே போற்றி 
ஓம் சிறப்புறு மணியே போற்றி, 
ஓம் சேய் நலம் காப்பாய் போற்றி! 

என்று கூற வேண்டும். 

தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு அன்றைய திதி, கிழமை நட்சத்திரமான சதுர்தி சௌம்ய வாசரம் (புதன்கிழமை) சத்ய நட்சத்திரம் சொல்லிக்கொண்டு அனந்த விரத பூஜை செய்கிறேன் என்று கூறுக. விநாயகரை தீர்த்தம் விட்டு நகர்த்திய பிறகு கலச பூஜை செய்க.

யமுனா பூஜை: 

அனந்த விரத பூஜையின் போது நேரடியாக அனந்தனை வழிபடுகின்றனர். சதியான முறை என்னவென்றால், முதலில் யமுனா பூஜையைச் செய்ய வேண்டும். அதன்படி கலசத்தின் மேல் யமுனா தேவியை பூஜிக்க வேண்டியதே முறை, இதில் ஒரு பிடி (28 தர்ப்பையால்) ஆதிசேடனை நினைத்து பாம்பு வடிவம் செய்து கலசத்தின் கீழே வைக்க வேண்டும். 

அரவத்தின் உருவான ஆதிசேடனே! ஆனந்த வடிவே பரந்தாமன் பூஜை செய்ய பணிவுடனே எழுந்திடுக! என்று அதன் மேல் துளசி, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். பிறகு கும்பத்தின் மேல் யமுனா பூஜை. 

ஓம் யமுனா தேவியே போற்றி! 
ஓம் கானிந்தினியே போற்றி! 
ஓம் தயை உருவே போற்றி! 
ஓம் காவிரியே போற்றி! 
ஓம் தாமிரபரணியே போற்றி! 
ஓம் கோதாவரியே போற்றி! 
ஓம் சகல நதி உருவமே போற்றி! 

என்றபின் தூபம் தீபம் நிவேதனமாகக் கற்கண்டு தாம்பூலம் படைத்து ஆரத்தி காட்ட வேண்டும். 

அனந்த விரத பூஜை: 

பதினான்கு தர்ப்பைகளை எடுத்து நுனியில் முடிச்சு இட்டு அதை பெண் ஜடை பின்னுவது போலப் பின்னி மூன்று கால்களாகப் பிரித்துக் கலசத்தின் மேல் வைக்க வேண்டும். (யமுனா பூஜைக்காகத் தனியாகச் சிறுகலசம் வைப்பதும் இந்த விதியில் செய்யலாம்). 

பிரதான தெய்வமாக அனந்தனை இதில் ஆவாகன பூஜை செய்ய வேண்டும். துளசி, சாமந்தி, செவ்வரளி மல்லிகை மலர்களைக் கலந்து அதில் பன்னீர் தெளித்து விட்டு பூஜை செய்ய வேண்டும். 

ஓம் அனந்தனே போற்றி! 
ஓம் ஆதிசேடனே போற்றி! 
ஓம் கால வடிவே போற்றி! 
ஓம் விஸ்வரூபனே போற்றி! 
ஓம் உலக நாயகா போற்றி! 
ஓம் அருள்வதில் எளியோய் போற்றி! 
ஓம் தேவியின் அன்பனே போற்றி! 
ஓம் சக்கரம் ஏந்தியவரே போற்றி! 
ஓம் உருவத்தில் உயர்ந்தவரே போற்றி! 
ஓம் கேசவா போற்றி! 
ஓம் நாராயணா போற்றி! 
ஓம் மாதவனே போற்றி! 
ஓம் கோவிந்தனே போற்றி! 
ஓம் விஷ்ணுவே போற்றி! 
ஓம் மதுசூதனனே போற்றி! 
ஓம் ஆனந்த வடிவே போற்றி! 
ஓம் அனந்த பத்ம தாபரே போற்றி! போற்றி! 

மலர் அரச்சனை செய்து முடிந்ததும் ஊதுபத்தி, தீபம் காட்டி அன்னங்களையும், பழங்களையும் படையலாக வைத்து நிவேதனம் செய்க. கையில் மலர்களுடன் துளசி எடுத்துக் கொண்டு தன்னையே மும்முறை சுற்றிக் கொண்டு ஆத்ம பிரதட்சிணம் செய்து புஷ்பாஞ்சலி செய்து விட வேண்டும். 

கை கூப்பியபடி, பச்சைமாமலை போல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா! அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர, யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!- என்று மூன்று முறை இப்பாடலைக் கூறி விழுந்து வணங்கி எழுந்து- அனந்தா! என்று மும்முறை கூறி ஒரு தாம்பூலத்தில் துளசி வைத்து அதில் தீர்த்தம் விட்டு அதைக் கலசம் அருகில் விட்டு கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். 


மஞ்சள் சரடு வைத்தல்: 

பதினான்கு மஞ்சள் கயிறுகளை 14 முடிச்சிட்டு ஒரு தட்டில் வரிசையாகப் பரப்பி அவற்றை வரிசையாக சரியை, மகாபலா, அஜா, மங்காளயை, சுபாயை, ஐயாயை, விஜயாயை, ஜயந்தியை, பாவநாசினி, விஸ்வரூபா, சர்வமங்களா, பார்சுவா, ராமா, கிருஷ்ணா என்ற பெயர்களைக் கூறி மலர் போட வேண்டும். 

இதற்கு தோரகக்ரந்தி பூஜை என்று சொல்வார்கள். இவற்றிற்கு தூபம், தீபம், நிவேதனம், கற்பூரம் காட்டி வணங்கிய பின் முதலில் ஒரு 7 வயது ஆண் குழந்தையை மனைப் பலகையில் அமர வைத்து அனந்தனாக பாவனை சÙய்து மலர்ச்சரம் அணிவித்து பிரசாதங்களைச் சிறிதளவு தட்டில் வைத்து தாம்பூலத்துடன் கொடுத்து அனந்த ரூபனே ஆனந்த வடிவே! கண்ணனே! 

எங்கள் குடும்பம் நலம் பெற வாழ்த்திட வேண்டும் என்று அந்தச் சிறுவனின் கையில் மலர் கொடுத்து உங்கள் தலையில் போடச் சொல்ல வேண்டும். மனையில் அனந்த விரதம் செய்த மஞ்சள் கயிறுகளை முதலில் வெளியிலிருந்து வந்திருக்கும் உறவினர் அல்லாதவர்களை அமர வைத்துக் கையில் வெற்றிலை பாக்கு பழம் கொடுத்து கட்டி விட வேண்டும். 

பிறகு, எளிய வகையில் பிரசாதங்களை எடுத்து பகல் உணவுடன் சாப்பிட்டுத் தனியாக சுத்தமான இடத்தில் அமர்ந்து மேற்சொன்ன அனந்த விரத மகிமைக் கதையைப் படிக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த கதைதான் என்றாலும் அதை, அனந்தனின் திருவிளையாடலாக நினைத்து 5 தடவைகள் படிப்பது அவசியம். 

அனந்த விரதம் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக வருகிறது. அதற்குக் காரணம் புதன் கிழமை. மகாவிஷ்ணுவுக்கு உரிய தினம். சத்ய நட்சத்திரம் பாம்பு உருவான ஆதி சேடனுக்கு உரியது என ஜோதிட உலகம் கூறுகிறது. புரட்டாசியின் முதல் புதனில் வருவது மிகச் சிறந்த தினமாகவும் வருகிறது. அனந்த விரதம் செய்தால் உங்கள் வாழ்வில் ஆனந்தமயமான எதிர் காலத்தைக் கொண்டு வரும்.

No comments:

Post a Comment