அன்பான வாசக அன்பர்கள் பலர் நீங்கள் ஞானம் பற்றி தற்போது எழுதுவதில்லையே?மருத்துவம் பற்றி மட்டும் எழுதுகிறீர்களே?ஞானம் பற்றி எழுதுங்கள் என பலமுறை கேட்டதற்கிணங்க இந்தத் தலைப்பில் பல விடயங்களை இங்கே விளக்க இருக்கிறேன்.ஒரு நபர் கருத்துரையில் பல நாட்களுக்கு முன்பு மச்சமுனிவரின் சித்த ஞான சபை என்று பெயர் வைத்துக் கொண்டு மூலிகைககளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறாயே பொறம் போக்கு என்று அன்பாக????? வேறு எழுதி இருந்தார்.
புறம் போகுபவனல்ல நான் அகம் போகின்றதால்தான் என்னுடைய வலைத்தளம் பலரால் பார்க்கும் படி இருக்கின்றது.இது எனது அகங்காரமல்ல.பொதுவாக எல்லோருக்குள்ளும் மறைந்து இருக்கும் அக அறிவு இந்த வலைத்தளத்தை விரும்பி பார்க்க வைக்கிறது .அப்போது ஏற்படும் நல்லுணர்வு நல்ல சொற்களையும் நல்ல சிந்தனைகளையும் தூண்டுகிறது.அது வெளிப்படும் விதமும் அந்தந்த உடல் சார்ந்ததாக இருக்கிறது. உயிரோடு கூடியிருக்கும் அறிவு சுத்த அறிவு .
பொதுவாக உடல் அசுத்த உடலாகத்தான் இருக்கிறது .இது காரண தேகத்தால் உண்டாவது . இது அறிவில்லாதது .இந்தக் காரண தேகம் எப்படி உண்டாகிறது.எடுத்துக்காட்டாக பெருங்காயம் வைத்த பாத்திரம் பெருங்காயம் காலி ஆனாலும் வாசனை போவதில்லை அல்லவா??அது போல போன பிறவியில் உடல் செய்த தீய நல்ல காரியங்கள் உடலும் உயிரும் பிரியும் மரணம் என்ற காரியத்திற்கு பின் உயிருடன் தொடரும் வாசனையே இந்த காரண உடல்.அந்த காரண தேகம் சேர்ந்த உயிரும்,நம் இந்த அசுத்த உடலும் சேர்ந்த பிறவியில்,உடலின் அறிவில்லாத தன்மையும் உயிரின் அறிவுள்ள தன்மையும் சேர்ந்து உடலில் அறிவில்லாததாகவும் , அறிவுள்ளதாகவும் சிற்சில நேரங்களில் வெளிப்படுகின்றது.
புலன்களின் வழியே மட்டுமே செயல்படும் மனம்,சித்தம்,புத்தி இவைகளின் ஒரு செயல்பாட்டை கவனித்தால் உங்களுக்கு இது புரியும்.ஒரு பஸ் உங்களை மோத வருகிறது.நீங்கள் அதைப் பார்க்கும் திசையில் இல்லை,பயங்கர திருவிழா ரேடியோ சத்தத்தில் உள்ளீர்கள் ,காதும் பஸ் வரும் ஓசையை கேட்கவில்லை.ஆனால் நீங்கள் திடீரென ஒதுங்கி விலகிவிட்டு அப்பப்பா நல்ல வேளை பஸ் மோதாமல் தப்பிவிட்டேன் என்று நினைத்திருப்பீர்கள்.
இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்த்தீர்களானால்,உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.கண்ணோ பார்க்கவில்லை , காதோ கேட்கவில்லை.புலன்களின் வழியே சென்று செயல்படும் மனம் இந்தப் புலன்களின் வழியே உணரவில்லை.அதை புத்தியில் ஒப்பிட்டு பார்த்து கால்களுக்கு ஒதுங்கு என்று கட்டளையிடவில்லை. ஆனால் எப்படி உடல் ஒதுங்கித் தப்பித்தது.
அதற்குக் காரணம் உள்ளே இருக்கும் எல்லா பேரறிவிற் சிறந்த உயிர் சித்தத்தின் வழியே செயல்பட்டு ஒதுங்கு என்று கட்டளையிடுகிறது . இது எப்படி நிகழ்கிறது.உடலும் உயிரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகும் போது உயிர் அதை விரும்பாவிட்டால்,தான் பெற வேண்டிய அனுபவங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறது என்றால் , தன் பேரறிவினால் உடலை நகரச் சொல்லி சித்தத்தினால் கட்டளையிடுகிறது.இல்லையெனில் இதையே விபத்தாக்கி உடலைப் பிரிந்து உயிர் பறந்துவிடும்.
இந்த ஒரு வினாடி சித்தத்தின் மூலம் செயல்படும் உயிரை,எல்லா நாளும் சித்தத்தின் மூலம் செயல்பட வைத்தால் நீங்கள் சித்தர்.இல்லையானால் தினம் நாய் போல் நம்மை அலைக்கழிக்கும் மனதால் செயல்படும் சாதாரண மனிதர்.
இந்த காரண தேகமான வாசனை நம் உடலில் இருக்கும் வரை நம் உடல் சுத்த தேகமாகாது.உடல் சுத்த தேகமாகவில்லை என்றால் சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாது. சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாவிட்டால் நீங்கள் ஞானத்திலும் தெளிய இயலாது.காயமும் சித்தியாகாது.முக்தியும் கிட்டாது.
எனவே உடலை முதலில் நோயில்லாமல் ஆக்கவேண்டும் .பிறகு அசுத்த தேகத்தை சுத்த தேகமாக ஆக்க வேண்டும்.நோயணுகாத வஜ்ர தேகமான பின் காயத்தை சித்தியாக்கி சித்தத்தின் வழியே செயல்கள் புரிந்து சித்தராக வேண்டும்.பின் முக்தி அடைய வேண்டும்.
இதற்கு சித்தர் விஞ்ஞானத்தின் முக்கிய அங்கங்களான வைத்தியமும், மருந்துகளின் அறிவும் , காய கற்பங்கள் முடிப்பதும் , பற்ப, செந்தூரங்கள் , சுண்ணம் முடிப்பதும் வான சாத்திர அறிவும் அடிப்படைத் தேவைகள்.இரத்தம் கடுங்காரமாக வேண்டும்.இப்படி ஆனால்தான் சுண்ணாம்பால் ஆன நம் எலும்புச் சட்டகம் , இரத்தம் ( URIC ACID ) யூரிக் அமிலம் போன்ற அமிலங்களால் அமிலத் தன்மையாகாமலும் , அதன் விளைவாக எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்படும் .அப்படி எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்பட்டால்தான் உடல் அழியாது . இவை எல்லாம் தெரியாமல் , ஒருவன் ஒரே பிறவியில் ஞானியாகவே இயலாது .
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!!!
– திரு மூலர் –
உடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது . எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம் , விளைவாக உயிரையும் வளர்க்கலாம் . உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .
முதலில் ஒரு விடயத்தை தெளிவாக்குகிறேன்.உலகில் உள்ள அனைத்துக் அறிவு சார்ந்த கலைகளையும் 64 கலைகளாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள்.அந்த கலைகள் அனைத்தையும் படிப்பறிவு என்று கொண்டால் நம் பட்டு அனுபவித்து தெரிந்து கொள்ளும் அறிவு பட்டறிவு,அடுத்தவர் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது அனுபவ அறிவு ( இதில் அடுத்த நபரின் படிப்பறிவும் , பட்டறிவும் அடக்கம் ) . சித்தர்களின் ஞானமும் , மருத்துவமும் , கற்ப சூத்திரங்களும் இந்த அனுபவ அறிவின் பால் பட்டவை.நாம் அனுபவித்துத்தான் தெரிய வேண்டும் என்றால் பல பிறவிகள் தேவை . சித்தர்கள் பெருங்கருணையினால் இவற்றை நமக்காக எழுதி வைத்துச் சென்றுள்ளனர் . இவை நமக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள்.
முதலில் ஆன்மா கொண்ட சிற்றறிவு பேரறிவாகப் பரிணமிக்க வேண்டும் .பின் இந்த பேரறிவு “தான் “ என்ற எண்ணத்தினால் வளர்ந்தது. அதனால் பேரறிவாக வளர்ந்த பின் “தான் “ என்ற அகங்காரத்தை விட வேண்டும் விட்டால் . ஜீவன் முக்தியடைய முடியும் . தேகத்தோடு காயசித்தியடையும் மார்க்கத்தையும் இந்தப் பேரறிவால் நிகழ்த்த முடியும் . இப்பிறவித் துன்பம் எல்லாம் இன்றோடே போச்சு என்றும் ,செத்தவரும் எழுவார் என்றும் வள்ளலார் கூறுகிறார் .
இந்த பேரறிவே திங்களூரில் பாம்பு கடித்து இறந்து போன அப்பூதியடிகளின் குழந்தையை திருநாவுக்கரசரால் உயிர்ப்பித்து தர அறிவு போதித்தது . இந்த நிகழ்ச்சியிலாவது உடல் இருந்தது . அவினாசியில் பல ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் வந்த முதலை ஒன்று சிறுவனை விழுங்கியது.திருஞான சம்பந்தர் அவினாசி சென்ற போது ஆற்றில் தண்ணீரே இல்லை.முதலில் ஆற்றில் தண்ணீரை வரவழைத்தார். பின் முதலையையும் வரவழைத்து அதன் வாயில் இருந்து விழுங்கப்பட்ட சிறுவனையும் வரவழைத்தார் . திரு ஞான சம்பந்தருக்கு மண முடிப்பதற்காக இருந்த பூம்பாவை இறந்துவிட்டாள் .அவள் உடலை எரித்து சாம்பலாக்கி குடத்துள் வைத்திருந்தார்கள்.அந்த அஸ்தியில் இருந்து உடலும் உயிரும் உள்ள பெண்ணாக்கினார் . இவை யாவும் இந்தப் பேரறிவால் இப்போதும் நிகழ்த்தலாம் .இது நம் செந்தமிழ் மொழிப் பாடல்களில் இப்போதும் மறைவாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளது . இதையே வள்ளலார் கீழ்க்கண்ட பாடலில் பாடுகிறார் . கேட்டு இன்புறுங்கள் .
கீழ்க்கண்ட தளங்களில் ஒரு சமயம் வள்ளலார் பாடல்களை திறந்த தரவிறக்கமாக வைத்திருந்தார்கள்.தற்போது அந்த வாய்ப்பை எடுத்துவிட்டார்கள்.அது ஏன் என்று கேட்ட போது எல்லோரும் தரவிறக்கம் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.மேலும் வள்ளலார் பாடல்களுக்கு சிங்கப்பூரில் இசை அமைத்து வெளியட பொருளுதவி செய்வதேயில்லை.எனவே திறந்த தரவிறக்க வாய்ப்பை எடுத்துவிட்டோம் என்றார்கள்.தமிழால் ஞானம் வளர்த்த நிலை மாறி எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா. ஆனால் நான் இந்தக் குறுந்தகட்டை வாங்கியது எனது தந்தையின் நண்பர் ஜோதி முருகன் ,என்பவரிடம் இராமனாதபுரத்தில் வாங்கினேன் . அவர்களிடம் இந்த பாடலை வெளியிட அனுமதி கோரும் போதுதான் அவர் தற்போது சிவனடி சேர்ந்துவிட்டார் என்று தெரிந்தது.அவரது புதல்வர் திரு ராஜ வீர் அவர்களிடம்தான் அனுமதி கோரி அவரது அலை பேசியில் தொடர்பு கொண்டேன் .
குறுந்தகடுகள் வேண்டுவோர் அவரைத் தொடர்பு கொள்க.
அவரது அலைபேசி எண் :-
அவரது தொலைபேசி எண் :- 04567- 220278
அவர் மின்னஞ்சலில் சிங்கப்பூருக்கு கேட்ட பின் அனுமதி அளித்தார் .பூட்டப்பட்ட குறுந்தகடுகள் வெளிவரும் இக்காலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் பிரதிகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவிப்போடு பூட்டப்படாத குறுந்தகடுகள் வெளியிட்டு எத்தனை பிரதி வேண்டுமானாலும் எடுத்து எல்லோருக்கும் கொடுங்கள் என்று அறிவித்தவர்களுக்கு நன்கொடையே கிடைக்காதது மிக வருந்தத் தக்கதாயிருக்கிறது . ’’என்ன செய்வது பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை.மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை’’. ஆன்மீகமும் ஞானமும் உண்மையில்செழிக்க பாடுபடுபவர்கள் நிலை இவ்வாறுதான் உள்ளது.எனவேதான் நான் அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பாடல் வெளியிடுகிறேன்.
அந்த வலைத் தளங்களும் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் கீழ்க்கண்ட இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.
No comments:
Post a Comment