telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Thursday, 10 October 2013

ஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல!

எழுத்தாளர் திரு. சுந்தர்
ஜி ப்ரகாஷ் அவர்கள் ஆதி சங்கரரின் "பஜ கோவிந்தம்" என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் சுருக்கமாக மொழி பெயர்த்து அளித்திருந்தார். அதனை வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன.
முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் முன்னுரை நினைவுக்கு வந்தது. நான் மாணவனாக இருந்தபோது அந்த உரையை அவருடைய குரலிலேயே (மிமிக்ரி) பேசி பரிசு பெற்றிருக்கிறேன். "அத்வைத சித்தாந்தத்தை பரப்பிய ஆதி சங்கரர், பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டு பல ஆக்கங்களை அளித்திருக்கிறார்; அவற்றில் பஜ கோவிந்தமும் ஒன்று" என்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் இந்த அறிமுகத்தை தொடங்கி, அதன் முத்தாய்ப்பாக "Shri Sanakra has packed into the Bhaja Govindam song, the substance of all Vedanta, and set the oneness of Gnana and Bhakthi to melodious music" என்று இரத்தினச் சுருக்கமாக இந்தப் படைப்பை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
அங்கும் இங்கும் அலைபாயும் நம் "மூட" மனத்தின் அலங்கோலத்தைப் பற்றித்தான் அந்த ஸ்லோகங்கள் விவரிக்கின்றன. நிலையில்லாத இகலோக சுகங்களின் ஈர்ப்பு எப்படி நம் மனத்தை ஆக்கிரமிக்கிறது, அதனிலிருந்து மீள்வது எவ்வளவு முக்கியம் என்பது இந்த நூலின் அடிநாதமான கருத்து. ஓஷோ ரஜனீஷ் இதற்கு விரிவான உரை ஒன்றை அளித்திருப்பதாக அறிகிறேன். அதனையும் சின்மயானந்தாவின் உரையையும் வாசிக்கவேண்டும். That is part of my Ta-da list!
அந்த நூலின் பதினான்காவது ஸ்லோகம் மிகவும் சுவாரசியமானதாக மற்றும் சமகால நிதர்சனத்திற்கு ஒப்ப அமைந்திருக்கிறது. அந்த ஸ்லோகத்தை அப்படியே சமஸ்கிருதத்தில் அளிக்கிறேன்:
जटिलो मुण्डी लुञ्छितकेशः
काषायाम्बर बहुकृतवेषः |
पश्यन्नपि च न पश्यति मूढः
ह्युदरनिमित्तं बहुकृतवेषः ||
தமிழில்:
ஜடிலோ முண்டீ லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹு கிருத வேஷ:
பஸ்யன்னபி ச ந பஸ்யதி மூட:
ஹி உதர நிமித்தம் பஹு கிருத வேஷ:
இதன் சுருக்கமான தமிழாக்கம்:
போலி சாமியார்"சடை வளர்த்தவன், சிகையை மழித்தவன், காவித்துணி உடுத்தி வேஷம் போடுபவன்- இவர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்கள். இவர்களின் வேஷம் அத்தனையும் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்."
வேஷம் போடும் சாமியார்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். திருவள்ளுவரும் இதே கருத்தை:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
என்று "கூடா ஒழுக்கம்" என்னும் அதிகாரத்தில் இந்த வேஷதாரிகளை நமக்கு சுட்டியிருக்கிறார்.
வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் என்ற நிலையைத் தாண்டி தற்போது அது பணம் கொழிக்கும் பிசினஸாக மாற்றம் கொண்டுவிட்ட சூழலைத்தான் நாம் காண்கிறோம். இந்தத் தொழிலுக்கு "ஆன்மீகம் பண்ணுவது" என்று பெயர்! கொண்டு வந்து கொட்டுவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்!
வேதாந்த ரகசியங்களை ஒரு கற்றறிந்த குருவின் மூலமாக அறிய வேண்டும் என்று நமது சனாதன தர்மத்தின் நீதி நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைக்கு உள்ளது போல் பள்ளிக்கூடங்களோ கல்லூரிகளோ இல்லாத காலகட்டத்தில் அறிவிற் சிறந்தவராகக் கருதப்பட்ட ஒரு பெரியவரை குருவாக ஏற்று அவர் மூலம் கல்வி கற்பது அந்தக் கால முறை. அதனால் அந்த குருவிற்கு சமுதாயத்தில் ஏற்றமானதொரு படிநிலையை அளித்திருந்தனர்.
ஆனால் அந்த குரு ஒருவரின் தகப்பனாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஒருவருக்கு காயத்ரி மந்திரத்தை "பிரம்மோபதேசம்" செய்விப்பது அவர்தம் தகப்பன் தானே! மேலும் சமஸ்கிருதத்தில் "குரு" என்னும் சொல்லுக்கு தந்தை என்றும் பொருள் உண்டு. காளிதாசரின் ரகு வம்சத்தில் நான்காவது சர்க்கத்தின் முதல் பாடலில் "ச ராஜ்யம் குருணா தத்தம்…" என்று தகப்பனால் அளிக்கப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிற இடத்தில் "குரு" என்னும் சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.
அந்த "குரு" தான் இன்றைக்கு பல போலிகள் கைகளில் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது!
முற்றிலும் மாறுபட்ட இன்றைய சூழலில் நாமே புத்தகங்கள் வாயிலாகவும், இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் பலவற்றை கற்க முடிகிறது. அதுபோல் வேதங்கள், உபநிஷத்துக்கள் மற்றும் பல வேதாந்த நூல்களையும், தர்ம சாஸ்திரத்தையும் நாமே கற்றறிந்து கொள்ளக்கூடிய நிலை வந்து விட்டது. ஆனால் தற்போதும் பல போலி அறிவாளிகள் தங்கள் வாக் சாதுரியத்தாலும், கண்கட்டு வித்தைகளாலும் (hocus-pocus) மக்களை ஏமாற்றி, தாங்களே கடவுள் என்றும் கூறி நம்ப வைத்துக் கொண்டும் ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற பல போலிகளின் ஏமாற்று வேலைகள் அம்பலத்திற்கு வந்து அவர்கள் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டனை கூட அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் அதுபோன்ற போலிகளிடம் ஏமாறுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு புதுக் கவிதை வாசித்தேன்:
குருவே,
நீங்கள் வெறும் காற்றிலிருந்து
விபூதி எடுக்கிறீர்கள்
லிங்கம் எடுக்கிறீர்கள்
தங்கம் எடுக்கிறீர்கள்
ஆனால்
உங்களை ஜாமீனில் எடுக்க
முடியவில்லையே!
Properly structured validation process, peer review போன்ற திறனாய்வு முறைகள் நெறிப்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் துறைகளிலேயே பல டுபாகூர் விஞ்ஞானிகள் (charlatans) தோன்றி மக்களை ஏமாற்றி வரும் இன்றைய சூழலில் "மகராஜன் கப்பல், கொள்வதெல்லாம் கொள்ளும்" என்ற நிலையிலிருக்கும் ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் புகுந்து விளையாடலாம் தானே!
உலகம் உருண்டை என்று எல்லோரும் சொன்னால், அது தவறு என்றும் உலகம் உண்மையில் தட்டையாக, ஆனால் சிறிது உப்பலாக ஊத்தப்பம் வடிவத்தில் உள்ளது என்றும் ஒரு புது அறிவாளி சொல்ல ஆரம்பித்தால், அவனைச் சுற்றியும் பத்து பேர் கூடுவார்கள். அவன் உடனே தன் அறிவார்ந்த சொற்பொழிவுகளை வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மில்லியன் கணக்கில் கல்லா கட்டுவான்! இதுபோன்ற செயல்பாடுகளைத்தான் நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
மக்களிடம் "மந்திரத்தில் மாங்காய் காய்க்கவேண்டும்", முயற்சியேயில்லாமல் பலன் பெற வேண்டும் என்னும் ஷார்ட்கட் மனப்பான்மை பெருகியிருப்பதால் இது போன்ற போலி சாமியார்கள் ஆதிக்கம் லவலேசமும் குறையாது என்பது திண்ணம்!

திருக்குறள் - பௌத்த உரை

திருவள்ளுவர் வைதிகரா சமணரா என்று விவாதங்கள் நடைபெறும் நிலையில், திருக்குறளுக்கு ஏன் ஒரு பௌத்த உரை எழுதக்கூடாது என்று தோன்றியது :). முதற்குறளுக்கான பௌத்த உரை, இதோ !

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மையானது ஆதிபகவன் உலகிற்கு முதன்மையானவன். 
 
எழுத்துக்களில் அகரத்தை மட்டும் முதன்மையாக உணர்த்தியது எதனால் ?
 
குருகுலத்தில் கற்கும் போது  அகரத்தை ஆசார்யர் உச்சரித்தவுடன், போதிசத்துவரின் அதிஷ்டானத்தினால் ”ததா அநித்ய ஸர்வஸம்ஸ்கார சப்தோ நிஸ்சரதி ஸ்ம” என்றவாறு அந்த அகரமானது சர்வஸம்ஸ்காரங்களும் ”அநித்யமானது” என உணர்த்தியதாம். “அகாரோ முக ஸர்வதர்மாணாம்” என்றவாறு அகரமே சகலதர்மங்களுக்கு முகமானது என்று அஷ்டஸாஹஸ்ரிக ப்ரஜ்ஞாபாரமிதா சூத்திரத்தில் பகவனே அகரத்தின் முதன்மைமை உபதேசிக்கிறார். 
 
ஆதிபகவன் யாரை குறித்தது ?
 
இங்கு ஆதிபகவன் எனக்குறிப்பது ஆதிபுத்தனையே. “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே *புத்தன்*” என்று சூளாமணி நிகண்டு கூறுகிறது. ”பகவான்மாரஜில்லோஜஜ்ஜின:” என்றவாறு அமரகோசமும் புத்தனுடைய நாமங்களில் ஒன்றாக “பகவத்” என்பதை குறிக்கிறது. ”ஏவம் மயா ஸ்ருதம் ஏகஸ்மின் ஸமயே பகவான்” என்று சகல பௌத்த சூத்திரங்களும் புத்தனை பகவான் என்று குறிப்பிட்டே நிதானத்தை துவங்குவதையும் கருத்தில்கொள்க. 
 
எழுத்துக்கள் எதை குறித்தன ?
 
பிராஹ்மி, கரோஷ்டி, அங்கலிபி, வங்கலிபி, திராவிடலிபி என பகவனால் அறியப்பட்ட சதுஷ்ஷஷ்டி லிபிகள்.
 
ஆதிபகவன் உலகிற்கு முதன்மையானது எதனால் ?
 
அமரகோசத்தின்படி, “லோகஜித்” என்பதும் பகவனின் நாமமாம். உலகத்தை வென்றவனாதலால் உலகிற்கு முதன்மையானாவன் எனக்கருதுவது இங்கு பொருந்தும். லலிதவிஸ்தர சூத்திரத்திலும் ”லோகநாத இத்யுச்யதே | லோகஜ்யேஷ்ட இத்யுச்யதே | லோகஸ்ரேஷ்ட இத்யுச்யதே | லோகேஷ்வர இத்யுச்யதே |” என்றவாறு லோகநாதன் என்றும் குறிப்பாக லோகஜ்யேஷ்டன்(உலகத்திற்கு மூத்தவன்) என்றும் லோகசிரேஷ்டன் என்றும் லோகேஷ்வரன் என்று பகவனின் நாமங்களாக பல இருப்பது ஈண்டு கவனத்திற்கொள்ளவேண்டியது.
 
வர்தமானகால பத்திரகல்பத்து புத்தரை அன்றி திரிகாலங்களை சார்ந்த சகல புத்தர்களையும் குறிக்கும் பொருட்டு, தர்மகாயத்தின் உருவகமான ஆதிபுத்தனே போற்றப்பட்டரென்க. ஆதிபுத்தன் தர்மகாய ஸ்வரூபத்தை குறிப்பதாம். தர்மகாயத்தின் ஸ்வரூபம் மஹாவைரோசனராம். அகரமோ வைரோசன புத்தரின் பீஜம். அகரம் ஆதிபகவனுக்கு உவமையாக கூறப்பட்டது குறிப்பால் இதை உணர்த்தவே என்க.
 
உலகு என்பதை எதை குறித்தது ?
 

மேரு பர்வதமும் அதை சுற்றிய நான்கு மஹாத்வீபங்களும் போன்ற, ஆயிரம் மேரு மலைகளை கொண்டது “ஸஹஸ்ரசூடிக லோகதாது”. ஆயிரம் ஸஹஸ்ரசூடிக லோகதாதுவை அடக்கியது “த்விதீயமத்யம லோகதாது”. ஆயிரம் த்விதீயமத்யம லோகதாதுவை அடக்கியது ”திரிஸாஹஸ்ர மஹாஸாஹஸ்ர லோகதாது”. இந்த திரிஸாஹஸ்ரமஹாஸாஹஸ்ரலோகாது மொத்தமும் ஒரு உத்தமநிர்மாணகாய புத்தனின் ஆளுகைக்கு உட்பட்டதாம். உத்தமநிர்மாணகாய புத்தனின் ஆளுகைக்கு உட்பட்டவையே “உலகு” என குறிக்கப்பட்டது.

Monday, 7 October 2013

அம்பிகை சிதக்னி குண்டத்தில் தோன்றியவள்


ம்பிகை சிதக்னி குண்டத்தில் தோன்றியவள். தேவர்களின் கார்யங்களைச் சிறப்பாகச் சாதிப்பதற்காகவே அவள் இவ்வாறு தோன்றினாள். இவ்வாறு சிதக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையை எரியோம்பி வழிபடுவதே “சண்டிஹோமம்” போன்றன.
வ்வாறாக, யாககுண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்று எழும் ஶ்ரீசக்கரத்தின் உச்சியில் உள்ள பிந்துவில் அன்னையானவள் பரசிவனின் மடியில் எழுந்தருளியிருக்கிறாள். அவளிடமிருந்து அவனையும், அவனிடமிருந்து அவளையும் பிரிக்க இயலாது.
“மூவர்க்கும் முற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனதிற்கும் நாடரிய பேரறிவாய்
தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும் எழில் பரையை வணங்குவாம்”
என்று அபிராமி பட்டர் போற்றுவது போல, எழில் பரையாக, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழையவளாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையளாய் அவள் அங்கே காமேஸ்வரியாக எழுந்தருளியிருக்கிறாள். இவ்வாறு காமேஸ்வரன் திருமடியில் எழுந்தருளியிருக்கும் அன்னை மஹாத்ரிபுரசுந்தரியானவள் நான்கு கரங்கள் கொண்டருள்கிறாள். அங்குசமும் பாசமும் பின்னிரு கரத்திலும் கரும்பும், பஞ்சபாணங்களும் அவளின் முன்னிரு கரத்திலும் மிளிர்கின்றன.
ப்போது, வரமருளவும் அபயம் தரவும் கரங்கள் இல்லையே என்றால், அப்பணிகளை அவள் திருவடிகளே அநாயாசமாகச் செய்தருள்கின்றன என்பது சக்தி உபாசகர்களின் நம்பிக்கை.
பிரபஞ்ச நாயகி பரம்பொருள் விமர்சனம் என்ற கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போது அப்பரம்பொருளுக்கே “அஹம்பாவம்” ஏற்பட்டு விடுகிறதாம். அப்போது அப்பரம்பொருள் காமேஸ்வரராகிறார். அம்பிகையோ, காமேஸ்வரி ஆகிறாள்.
தன் போதே, பிரபஞ்சம் உருவாகிறது. இக்காமவல்லியை உபாசிக்கும் மரபே ஶ்ரீவித்யையாகும். ஶ்ரீவித்யையின் முக்கிய இடத்தை ஶ்ரீசக்கர உபாசனை பெறுகிறது என்பர்.
ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.
சிவானந்தப் பேறருளி முக்தி தருபவள்
சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.
க, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.
“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே
                                                        – (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”
றுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.
செம்மை சார் மரபின் வழியே ஶ்ரீ சக்கரபூஜை
ம்பிகையை ஶ்ரீசக்கரம் என்ற யந்திரத்தின் நடுவில் பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.
பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.
டுத்துப்  பூஜை  செய்பவர்  தமது  பௌதீக  உடலை  மந்திரங்களின்  மூலம்  தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும்  வழிபாட்டையாற்ற  வேண்டும்.  இதன்  பின்,  தெய்வீகச்  சரீரமெங்கும்  தேவர்களை  ஆவாஹித்துத்   தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத்  தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.
டம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி  தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்டபின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கரபூஜையினுள் நுழைகிறார். ஶ்ரீசக்கரபூஜையில் பாத்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கலசபாத்திரம், சாமான்யார்க்கிய பாத்திரம், குரு பாத்திரம், சுத்தி பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், அலி பாத்திரம், பலி பாத்திரம், ஆத்மபாத்திரம், இவ்வாறாக அப்பாத்திரங்கள் பல்திறத்தன.. அவை பூஜையின் ஒவ்வொரு நிலைகளில் சாதகனால் பாவிக்கப்பெறுகிறது.
ள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள  ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்.
துஷ்ஷஷ்டி உபசாரங்கள் என்ற அறுபத்து நான்கு உபசாரங்களை அன்னைக்கு வழங்கிப் பூஜித்து, அம்பாளைச் சுற்றி எட்டெட்டு வரிசையில் சேரும் ஆவரண சக்திகளை பூஜிப்பர். இது பரிவாரார்ச்சனை என்று குறிப்பிடப்பெறும். நிறைவாக, நவாவர்ணபூஜையும், லலிதா சஹஸ்ரநாம அல்லது திரிசதி நாம அர்ச்சனையும், நைவேத்தியத்துடன் விசேட பூஜையும் செய்வர். அதன் பின் பலிதானம், சுவாஸினீ பூஜை என்பவற்றினையும் ஆற்றுவர்.
ம் தாயே, நாயோம் தவறே செய்யினும் பொறுத்தருள வேண்டும்.. என்று விண்ணப்பம் செய்து பூஜாபலனையும் நிறைவில் அன்னையின் வரதஹஸ்தம் என்ற வரமருளும் இடது திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பெற்று ஶ்ரீசக்கரபூஜை நிறைவு பெறும்.
ஶ்ரீ சக்கர உபாசனையில் பயமும், பயனும், அருளும்.
திசங்கரபகவத்பாதர் ஶ்ரீ சக்கரவழிபாட்டை சீரமைத்துப் பரவச் செய்தார் என்பது நம்பிக்கை. ஶ்ரீ வித்யோபாசனை என்று போற்றப்பெறுகிற ஶ்ரீசக்கர வழிபாடு இன்று சக்தி வழிபாட்டாளர்களிடம் சிறப்புற்று விளங்குகிறது.
திசங்கரபகவத் பாதர் சிருங்கேரியில் ஶ்ரீ சக்கரத்தின் மீது சாரதா தேவியைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்லுவர். காஞ்சியில் காமகோடி பீட வாசினியாக எழுந்தருளியிருக்கிற அன்னை காமவல்லி முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீ சக்கரபூஜை செய்திருக்கிறார். சிதம்பரத்தில் ஆடவல்ல பெருமானின் வலப்பக்கத்தில் சிவசக்கரமும் சக்தி சக்கரமும் இணைந்து சம்மேளனமாக இருக்கிறது. இதனையே சிதம்பர ரகசியமாக வழிபடுகிறசிறப்பும் அமைந்திருக்கிறது. அன்னை சிவகாமி சந்நதியில் சிறப்பான ஶ்ரீ சக்கரம் ஒன்று அமைந்திருப்பதாகவும் குறிப்பிடுவர்.
திருக்குற்றாலத்தில் ஶ்ரீ சக்கரபீடம் இருப்பதாயும், திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் அம்பாள் சந்நதியில் ஶ்ரீ சக்கரமே பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப்பதாகவும் (அம்மைக்கு இங்கு திருவுருவம் இல்லை) திருவானைக்காவில் அகிலாண்டநாயகியின் காதணிகளில் ஶ்ரீ சக்கரம் பொறிக்கப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுவர். இவ்வாறாக, தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவஸ்தலங்களிலும் அன்னையின் ஶ்ரீசக்கரம்சிறப்புடன் வழிபாடு செய்யப்பெற்று வருகிறது.
ஶ்ரீ வித்யா உபாசனையை நன்கு நெறிப்படுத்தியவர்களில் ஆதிசங்கர பகவத்பாதர், வித்யாரண்யர், நீலகண்டர், பாஸ்கரராஜர் ஆகியோர் முதன்மை பெறுகின்றனர்.
ஶ்ரீ சக்கரம் கைலாசப்பிரஸ்தாரம், மஹாமேருப்ரஸ்தாரம், அர்த்தமேரு பிரஸ்தாரம், பூபிரஸ்தாரம் எனப்பலவகை உண்டென்பர். இலங்கையில் பல பெரியவர்களுடன் பேசியதில் சிலர் ஶ்ரீ சக்கர வழிபாடு பற்றி சிறிது அச்சம் கொள்கின்றனர். தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய வழிபாடு என்றும் விதி முறை வழுவாது செய்ய வேண்டிய வழிபாடு என்றும் இது குறித்து அவர்களின் அச்சம் இருக்கிறது.
ன்னொரு நூலொன்றில் படித்ததில் அதில், ஶ்ரீ சக்கிரோபாசனையைச் செய்பவர்கள் மனச்சலனம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் திரிபுரசங்காரத்தின் பின் திரிபுராரியான பரமேஸ்வரனே ஶ்ரீ சக்கர ரூபிணியாக, தேவியாக இருக்கிறார் என்றும் கண்டிருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது ஶ்ரீ சக்கரபூஜை பலராலும், பல நிலைகளிலும் சுருக்கமாகச் செய்யப்பெறக் காண்கிறேன். அங்கெல்லாம் பெரியளவில் ஆசார மரபுகள் பேணப்படுவதாகவோ, அச்சம் கொள்வதாகவோ, தெரியவில்லை.. கடைகளிலும் சிறியனவாயும், பெரியனவாயும் பல ஶ்ரீசக்கரங்கள் விற்பனைக்கு இருக்கக் கண்டேன்.
ழமையான யந்திரங்களில் எழுத்துக்கள் நிறைய இருக்கும். ஶ்ரீசக்கரத்தில் எழுத்துக்கள் இருப்பதில்லை. ஸ்ரீ சக்கரம் பண்டைய இந்துக்களின் பாரத நாட்டினரின் கேத்திரகணித அறிவையும், ஆற்றலையும், விஞ்ஞான உணர்வையும் காட்டுவதாயும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சக்கர ராஜாவாக இருப்பதால் ஶ்ரீசக்கரத்தை சக்ரராஜம் என்றும் போற்றுவர்.
த்தாத்திரேயர் வழி நின்று பரசுராமர்  ஶ்ரீவித்யையைக் கற்றுப் பரப்பிப்  பின் தன் சீடரான ஸமேதஸ் வழியே நமக்கு இன்று கிடைத்திருக்கிற நூலாகப் பரசுராம கல்பத்தைக் குறிப்பிடுவர். இதன் வழியே இன்றைய தென்னகத்துச் ஶ்ரீசக்கர வழிபாடுகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது.
சீராக  முறைப்படி  ஶ்ரீவித்யையை  அனுசரித்து  ஶ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரஹஸ்யங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறுவார் என்று குறிப்பிடுவர். பாஸ்கரராஜர் போன்ற முக்கிய ஆச்சார்யார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர்.
க, சக்கரசக்தியாக நின்றருளும் அன்னையை பற்றிய சிந்தனைக்கு வித்திட்டு, இச்சாரதா நவராத்திரிப் புண்ணிய காலத்தில், இது தொடர்பான சிந்தனை பெருகப் பிரார்த்திக்கிறோம்.


Saturday, 5 October 2013

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் 


கருவறையில் சப்தகன்னிகள்: கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருக்கின்றனர். சிவன் சாபவிமோசனம் கொடுத்தபோது, சப்தகன்னியர்கள் மீண்டும் தூம்ரலோசனனை அழித்தால் தோஷம் பிடிக்குமே! என அஞ்சி, அசுரனை எதிர்க்க முன்வரவில்லை. எனவே, அசுரனை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டனர். சிவன் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, அசுரனையும் அழித்தார். இவர் இத்தலத்தில் சப்தகன்னிகளுக்கு பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம். இங்கு சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சாமுண்டியை, துர்க்கையாக வழிபடுகின்றனர். எனவே, துர்க்கைக்கு சன்னதி இல்லை. பெண்கள் துர்க்கைக்குரிய வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே செய்வது விசேஷம்.

ராகுகால வேளையில் இவளுக்கும், சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது. காலையில் வணங்கவேண்டிய சிவன்: இக்கோயிலில் சிவன் சுயம்புவாக, வாமதேவ முகமாக (வடக்கு திசையை நோக்கி) இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி இருக்கிறது. கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும் எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8 சிவன்களையும் தரிசிக்கலாம். இத்தலத்தில் ஐப்பசி முதல்கட்ட துலாஸ்நானம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ""காலைக்கடம்பர், மதியம் சொக்கர் (ரத்தினகிரி), மாலை ஈங்கோய்நாதர் (ஈங்கோய்மலை)'' என்ற வரிசையில் வழிபடுவது குறைவிலாத பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். அதன்படி, இவரை காலை வேளையில் வழிபட்டால் காசியில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு "தெட்சிணகாசி' என்றொரு பெயரும் உண்டு.

அகத்தியர், கண்ணுவ முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர். அம்பாள் முற்றிலாமுலையம்மை தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறாள். இச்சன்னதிக்கு முன்புறம் "பரமநாதர்' காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள்.
இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு. 


முருகன் சிறப்பு: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். "ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்' என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார். இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருக்கின்றனர். இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.

தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம்
பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர்.

அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

மகா பிராமணன்

  •  ‘காமக்குரோதங்களை விட்டொழிக்கிறவன் எவனோ அவனே மகாபிராமணன்' எனும் ஞானம் பேரரசன் கௌசிகனை விசுவாமித்திரனாக்குவது தான் இந்நாவலின் சாரம். பிராமணனாக வேண்டுமென்ற வேட்கையும் கூட காமம் தான் எனும் சிந்தனைத் தெளிவு நம்மையும் புடமிடுகிறது. 

  •       காம குரோதம் இல்லாதவனெனில் செருக்கு அறுத்தவன் என்றும், மரண துன்பத்திலிருந்து வசிஷ்டர் விடுபட்டது செருக்கை வென்றதால் தான் என இந்திரனே சொன்னபடியால், படைப்பின் இரகசியத்தை கண்டறிந்து விஸ்வாமித்திரனே ஒரு உலகைப் படைக்கும் ஆற்றலையும் பெற்றதெப்படி என உணர்த்தி நிற்கிறது நாவல். இதில் உபநிடதத்தின் இரகசியங்கள், காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைத்தும் அடங்கியுள்ளன. வேதகாலத்து உலகம் சமகால மொழியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தேவகன்னியர்கள் இவ்வுலகில் வந்து தவ சிரேஷ்டர்களோடு குடும்பம் செய்ததாக புனையப்பட்ட கற்பனையை மேஜிக்கல் ரியலிசம் என்பர் இக்கால இலக்கியவியலாளர்கள்.

  • வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்த கௌசிக மாமன்னன் அவரது உபசரிப்பின் அஸ்திவாரம் ஆசிரமப் பசுவான காமதேனுவின் வழித்தோன்றல் நந்தினி தான் என்றறிந்து அதனை தனக்காக தரும்படி வசிஷ்டரை வேண்ட, ‘உனக்குத் தேவையானதை தவத்தின் மூலம் பெற்றுக் கொள்' என்கிறார் வசிஷ்டர். அவர் மேலிருந்த அன்பு துவேஷமாகிறது அரசனுக்கு. அவனுக்கு ஈசனருள் பெறவேண்டிய மார்க்கத்தைக் காட்ட தன் சீடன் வாமதேவனைப் பணிக்கிறார் வசிஷ்டர்.

  • இயற்கையின் பாதையிலிருக்கிற தடையை அப்புறப்படுத்தி, அதன் செயல்பாட்டினை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பிராமணனின் தர்மம் எனவும், உலக நன்மைக்காக தவம் புரியும் பிராமணன் தனக்கு பிரியமானவற்றைக் கவனிக்கக் கூடாதெனவும், புலனாகாதவற்றிலிருந்து புலனறிவுக்கு வருகிற சக்தியை மையப்படுத்தி ஒருபுறமிருந்து பெற்றதை மறுபுறம் பரவலாக்கி உலகுக்கு தருகிற இயந்திரமாகிய பிராமணன் பிரியம், பிரியமற்றதற்கு அப்பால் இருப்பவன் என்றும் வாமதேவனையும் நம்மையும் தெளிவிக்கிறார் வசிஷ்டர்.

  •  தவப்பயனால் கிட்டிய சிவ அஸ்திரங்களை கௌசிகன் வசிஷ்டர் மேல் செலுத்த வெகு எளிதாக அவற்றை எதிர்கொள்கிறார் வசிஷ்டர். தனது பிரம்மதண்டத்தால் கௌசிகனின் பகைமனதை மாற்றுகிறார். தோல்வியால் துவண்ட கௌசிகனை வாமதேவன், தவமென்பது யாதென தெளிவிக்கிறான்.

  • “தத்தம் விருப்பங்கள் நிறைவேற யாரெல்லாம் என்னென்ன செய்கின்றார்களோ அதெல்லாம் தவமே.

  • மனமொரு விளக்கு கம்பம். ஒரே இடத்தில் குவித்தால் பிரகாசம் மிகுவது போல் மனதை ஒருநிலைப்படுத்த மனதின் அங்கங்களாக இருக்கிற பொறிகளைப் பிடிக்க வேண்டும். மனம் அலைபாயாதபடி பிடித்து நிறுத்தும் போது மையக்கோட்டில் சுழலும் பம்பரம் போல் நோக்கத்தில் சுழலும். பாம்பு பின் முகமாக சுற்றிக் கொண்டால் தலையானது வாலைப் பிடிப்பது போல் நோக்கம் நிறைவேற செய்யவேண்டியது மறுபுறம் பதிலாகக் கிடைக்கும். இதுவே தவத்தின் முதல் கட்டம்.

  • விதை மரமாவது போன்றதே தவம். காலம், இடம் பொருந்தினால் மட்டுமே சரியாகும். தன் நிலையைக் காப்பாற்றிக் கொண்டு, எதிர்வரும் நிலையை தனக்கேற்றபடி வடிவமைத்துக் கொள்ளப் போராடுவதே தவம்.

  • பாம்பாட்டி பாம்பை ஆட்டி வைப்பது போல, மனதை தன்போக்கில் வசப்படுத்திக் கொள்கிறவன் இந்த உலகை ஆட்டி வைப்பான்.

  •  நீ என்னவாக வேண்டுமென்பதை நிச்சயித்துக் கொள். அதற்கு உன் முயற்சியே சாதனை என நம்பு. முயற்சி சாஸ்திரத்தின் வழியாக நடைபெறுமானால், சிறிதளவு கொடுத்து அதிக அளவு நிரப்பிக் கொள்வதைப் போன்றது. அது சாஸ்திரத்துக்கு அப்பாற்பட்டதெனில், ஒரு படி அரிசி கொடுத்து மூன்று படி கேழ்வரகு வாங்குவது போலாகும்”.

  •  இவ்வுபதேசங்கள் வாமதேவனால் நமக்கும் சித்திக்கின்றன.

  • சத்திரிய குலத்தில் பிறந்த  விஸ்வாமித்திரர், தன் உடலோடு சொர்க்கம் புக விரும்பிய திரிசங்கு மன்னனுக்காக தனியாகவொரு சொர்க்கலோகம் படைக்குமளவு மகாபிராமணனாய் உயர்வடைந்ததை நாவல் ஊர்ஜிதப்படுத்துகிறது.

  • கன்னட இலக்கிய உலகில் சொல்லத்தக்க ஓரிடம் உண்டு தேவுடு நரசிம்ம சாஸ்திரிக்கு. (1896 - 1962) குழந்தை இலக்கியம், திரையுலகம், பத்திரிகையாளர், கல்வி பிரச்சாரம், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். அறுபதுக்கும் அதிகமான இவரது படைப்புகள் கன்னட இலக்கியத்தில் என்றும் அழியாதவை. மகா பிராமணன், மகா சத்திரியன், மகா தரிசனம் ஆகிய மூன்று நாவல்களும் போதும் இவரது பெருமையைப் பறைசாற்ற. இவரது கடைசி நாவலான மகா தரிசனத்தை வேதம் என்றே கூறலாம்.

  • இறையடியான் சாகித்ய அகாதெமிக்கு சர்வக்ஞர் உரைப்பா, சலங்கைச் சடங்கு, போராட்டம், அவதேஸ்வரி, புரந்தர தாசர் போன்ற நூல்களின் மொழிபெயர்ப்பால் நிலைத்த புகழுடையவர். இவர் மொழிபெயர்த்த பணியம்மா நாவல் கல்லூரிகளுக்குத் துணைப்பாட நூலாக உள்ளது. அவரது அனுபவமிக்க மொழியாக்கம் கன்னடத்தை தமிழுக்கு நெருக்கமாக்குகிறது.

  • நூல் பெயர்: மகா பிராமணன்
  • கன்னட மூலம்: தேவுடு நரசிம்ம சாஸ்திரி
  • தமிழாக்கம்: இறையடியான்
  • வெளியீடு : சாகித்ய அகாதெமி
  • பக்கங்கள்: 384
  • விலை: ரூ.180/-

பால் பானங்கள், பால் தேவையற்ற பானங்கள்..

பால் பானங்கள் சில...,

உறவினர்களோ நண்பர்களோ வீட்டுக்கு வந்தால் உடனடி உபசரிப்பு சூடான பாலில் காபி அல்லது தேநீர் மற்றும் பூஸ்ட் ஹார்லிக்ஸ் போன்ற தயாரிப்புகள். மாறுதலாக சில பானங்களைக் கொடுத்து உபசரிக்கவும், நாம் தினசரி பருகவும் சித்த மருத்துவ முறையில் சில பானங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி சுவை நீர்:
தோல் நீக்கிய இஞ்சியை (ஒரு இஞ்ச்) நசுக்கி அரை டம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டி, அரை டம்ளர் சூடான பாலில் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பரிமாறவும். 
காலை காபிக்கு பதில் இதை தினசரி அருந்த, நெஞ்சு கரிப்பு, புளிஏப்பம், வாயு தொல்லை ஆகியவை நீங்கும். நல்ல பசி ஏற்படும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இஞ்சி ஒரு காய கல்ப மூலிகையாதலால் முதுமையைத் தள்ளிப் போடும். (அப்படிப் போடுங்க!)

பாதாம் சுவை நீர்:
பாதாம் பருப்பு 2, முந்திரிப் பருப்பு 4, கசகசா 1 டீஸ்பூன் இவற்றை ஊற வைத்து அரைத்து சூடான ஒரு டம்ளர் பாலில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க, வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாகும். இதை தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்க புரதச் சத்து எளிதில் கிடைப்பதோடு நாள் முழுதும் உற்சாகமாகச் செயல்படத் துணைபுரிகிறது.

செம்பருத்திச் சுவைநீர்:
காம்பு நீக்கப்பட்ட ஐந்து செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இது இதய நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்து. மேலும், இரத்த அழுத்த நோயாளிகள், வெள்ளை படும் பெண்களுக்கும் ஒரு சிறந்த பானம். இதை தினம் பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

, சுவைநீர்:
10 தாமரை இதழ்களை ஒரு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்திவர ‘இதய கமல'மாகிய தாமரையால் இதய நோயாளிகளுக்கு நலம். தாமரைப் பூ இதழ்களை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டும் இவ்வாறு தயாரிக்கலாம்.

ஆவாரைப்பூ சுவைநீர்:
‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' எனும் பழமொழிக்கிணங்க ஆவாரைப் பூ, இலை, பட்டை இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, இப்பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து வெறும்வயிற்றில் தினசரி பருகிவர, உடல் வறட்சி, அடங்காத தாகம், மூச்சுத் திணறல் ஆகியவை நீங்கும். தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க, நீரிழிவு கட்டுப்படும். நல்ல சுறுசுறுப்பை உண்டாக்கும்.

இனி, பால் தேவையற்ற பானங்கள்...

அத்திப்பழச் சுவைநீர்:
கொத்துக்கடலை ஒரு கைப்பிடி எடுத்து இரவில் ஊறவைத்து விடவும். 4 அத்திப்பழங்களைத் துண்டாக்கி கடலையுடன் ஊறவிடவும். மறுநாள் காலை இக்கலவையை நன்கு வேக வைத்து வடிகட்டி சிறிது பால் சர்க்கரை சேர்த்து பருகி வர இரத்தம் தூய்மையடையும். உடல் திசுக்களுக்கு வளர்ச்சி அளித்து சுறுசுறுப்பை உண்டாக்கும். இரத்தப் பற்றாக்குறையுள்ளவர்கள், மாதவிடாய் கோளாறுள்ளவர்களுக்கு இதுவொரு சிறந்த பானம்.

நிலக்கடலைப்பால் சுவைநீர்:
100 கிராம் வறுக்காத நிலக்கடலையை நீரில் ஊறவைத்து வடிகட்டி,ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு நாள் முழுதும் வைத்துவிட்டால் மறுநாள் அது முளைவிட்டிருக்கும். அத்துடன் 2 முந்திரிப்பருப்பு 4 ஏலக்காய் சிறிது குங்குமப்பூ ஆகியவற்றைப்போட்டு நன்கு அறைத்துப் பாலெடுத்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம். (முளைகட்டிய பயிறை தினசரி தேவையானதை எடுத்துக்கொண்டு குளிர்பதனப்பெட்டியில் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.)
இது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த பானம். நரம்புகளுக்கு நல்ல சக்தியளிக்கிறது. முளைகட்டிச் செய்வதால் கூடுதல் சத்துகள் பெற வாய்ப்புள்ளது.

எள்ளுப் பால்:
100 கிராம் எள்ளை ஊறவைத்து முளைக்க வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய்த் துருவல், ஏலக்காய் கலந்து நன்கரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்துப் பருகலாம். இது பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த பானம். ஒல்லியான குழந்தைகளுக்கு இதை தினமும் செய்து கொடுக்கலாம். (‘இளைத்தவனுக்கு எள்ளு' என்பதை நினைவூட்டிக் கொள்க.)

கொள்ளுப் பால்:
100 கிராம் கொள்ளை ஊற வைத்து முளைக்க வைத்து அத்துடன் சிறிது தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துப் பாலெடுத்து , சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் கலந்து பருகி வர, மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பவர்கள், மூட்டு வலியுள்ளவர்கள், பக்கவாத நோயாளிகள் குணமடைவர்.
உடல் எடையைக் குறைக்க பிரயாசைப்படுபவர்கள் இதைத் தினம் பருகிவர பலன் உறுதி. (‘கொழுத்தவனுக்குக் கொள்ளு')

புதினா தேநீர்:
அடடே, வாங்க, வாங்க. இதோ கைப்பிடி புதினா இலைகளைக் கொதிக்க வைத்த நீரில் சிறிது எலுமிச்சை சாறும் சர்க்கரையும் (வெல்லம், பனைவெல்லம்) கலந்த சூடான புதினா தேநீர் குடிங்க. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. சூடாக பருகுவதால் எலுமிச்சை சாறு சளிபிடிக்குமென்ற பயமில்லை. வாய் துர்நாற்றம் போகும். நாள்முழுதும் புத்துணர்ச்சி. ருசியோ, தினம் தினம் பருகச் செய்யும். இரத்தம் விருத்தியாகும். 
என்னது... இன்னொரு டம்ளரா...!

Friday, 4 October 2013

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ்

குரங்கு புத்தி' என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது 'குரங்கு புத்தி' என்கிறோம்.
ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம்
என்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவனந்தலஹரி – 20). 'பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ ! வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்; நானும் பிழைத்துப் போவேன்' என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, 'ஹ்ருதய கபி' அதாவது 'மனக்குரங்கு', என்கிற வர்த்தையைப் போட்டிருக்கிறார்.
வெள்ளைக்காரர்களும் 'மன்கி மைண்ட்' என்கிறார்கள்.
கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.
ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. 'பசித்தாலும் புல் தின்னாது' என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் !
ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்னைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.
இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு எங்கேயோ குஹையிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. 'அஸாத்ய ஸாதகர்' என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர்.
மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்; ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே 'இதைவிட வேகமில்லை' என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு !
ரொம்ப வேகமாக ஓடுவது எது?
'வாயுவேகம், மனோவேகம்' என்பார்கள்.
காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.
'காற்று மாதரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே ! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை?' என்று அர்ஜுனன் முறையிடுகிறான்.
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண…….வாயோரிவ ஸுதுஷ்கரம் (கீதை 6-34)
பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் 'ஸ்டெடி'யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:
யதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா….. (கீதை 6-19)
'நிவாதம்' என்றால் 'காற்று இல்லாமல்' என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். 'வாயுபிடிப்பு' என்றும் 'வாத ரேகம்' என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்?
ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?
சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் ! வாயு குமாரர். 'வாதாத்மஜர்' என்றும் சொல்வார்கள். 'வாத' என்றாலும் வாயுதானே? 'ஆத்மஜன்' என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
'யூதம்' என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் 'வாநர-யூத-முக்யர்'.
இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?
வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
'மனோ-ஜவம்' – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். 'ஜவம்' என்றால் வேகம்.
'மாருத – துல்ய – வேகம்' – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். 'மாருதம்' என்றாலும் காற்றுதான். 'மந்த மாருதம்' என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு 'மாருதி' என்று பெயர். 'வீர மாருதி கம்பீர மாருதி' என்று (பஜனையில்) பாடுவார்கள்.
ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல 'மனோஜவர்' : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல 'மாருத-துல்ய-வேகர்'; அவரே வாயுவின் பிள்ளைதான்- 'வாதாத்மஜர்'; சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- 'வாநர-யூத-முக்யர்!'.
இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
என்று ஸ்தோத்ரிக்கும்படியாவும் இருக்கிறார் !
புலன்களை வென்றவர் இவர்: 'ஜிதேந்த்ரியர்'- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.
அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள 'புத்திமதாம் வரிஷ்ட'ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே 'ஸ்டெடி'யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி 'புத்திமதாம் வரிஷ்ட'ராயிருக்கிறார்.
'புத்திமான்' என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி 'புத்திமதாம் வர' என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் 'புத்திமான்களில் சிறந்தவர்' என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, 'புத்தி மதாம் வரீய' என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, 'கம்பேரடிவ்' – ஆக அவர் மற்றவர்களை விட உயர்வு சொருந்தியவரக இருக்கும் போது 'வரீய' என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படுச் சொன்னல்கூடப் போதாது ! இதையும்விட உசத்துயாக, 'இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடுகூட 'கம்பேரிஸ'னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு 'ஸூபர்லேடிவ்'; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்' என்றே (ச்லோகத்தில்) 'புத்திமதாம் வரிஷ்ட' என்று சொல்லியிருக்கிளது. 'வரிஷ்ட'தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக 'கம்பேர்' பண்ணக்கூட இன்னொன்று இல்லை.
ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.
ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, 'பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை' என்று இக்ர ஸ்தானம் (முதலிடம்) பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான். தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும். 'ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி' என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||
ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .

Courtesy: Mannargudi Sitaraman Srinivasan