வசிஷ்டர் உரைத்த வரலாறு :
இராமன் உள்ளிட்ட சூரியவம்சத்து அரசர்களுக்குக் குலகுருவாக விளங்கியவர் வசிஷ்டர். பிற்காலத்தில், ஒரு சமயம் பிருஹத்பலன் என்ற சூரியவம்ச அரசன் தன் குலகுரு வசிஷ்டரைக் காண அவருடைய ஆச்ரமத்திற்கு வந்தான்.
அனைத்து நலன்களையும் அருள வல்லவரான தெய்வத்தைப் பற்றி, தான் அறிய விரும்புவதாக பிருஹத்பலன் வசிஷ்டரிடம் கூறினான். சக்தி வாய்ந்த தனது கதிர்களால் உலகத்தை விழிப்படையச் செய்து இயக்குகின்ற சூரியனே கண்ணால் காணத்தக்க தெய்வம் என்று வசிஷ்டர் உரைத்தார்.
சகல வல்லமை படைத்த சூரியனை வழிபட்டு இகபரசுகங்கள் அனைத்தையும் அடையலாம் என்றும் வசிஷ்டர் பிருஹத்பலனுக்குக் கூறினார்.
“குருநாதரே! சுடர்க் கடவுள் சூரியனுக்கு முதலில் எங்குத் திருக்கோவில் தோன்றியது? நான் அவரை எந்தத் தலத்தில் வழிபட்டு நலன்களை எய்தலாம்? அது குறித்த விவரங்களைத் தாங்கள் விளக்கியருள வேண்டும்!” என்று பிருஹத்பலன் வேண்டினான்.
“சந்திரபாகா என்ற நதியின் கரையில் சாம்பபுரம் என்ற நகரம் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரின் புத்திரர்களில் ஒருவனான சாம்பன் என்பவனே சூரியபகவானுக்குத் திருக்கோவில் எழுப்பியவன் ஆவான். அத்திருத்தலத்தில் சூரியன் பன்னிரு வடிவங்களுடன் அருள் பாலிக்கிறார்” என்று வசிஷ்டர் விவரிக்கத் தொடங்கினார்.
அழகு-ஆணவம்-அவலம் : ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி என்பவளை, கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஜாம்பவதி பெற்றெடுத்த மகனே சாம்பன். அவன் காண்பவரைக் கவர்ந்திழுக்கும் ஆணழகனாக விளங்கினான். அதனால், அவனிடம் ஆணவம் குடிகொண்டது. ஸ்ரீகிருஷ்ணரின் மகன் என்ற பெருமையும் அவனுடைய ஆணவத்தை அதிகமாக்கியது.
நாரத முனிவர் கிருஷ்ணரைக் காணத் துவாரகைக்கு வந்தார். பிரத்யும்னன் முதலான கிருஷ்ணகுமாரர்கள் அனைவரும் நாரதரை வணங்கி வரவேற்றனர். ஆணவத்தின் உச்சத்தில் இருந்த சாம்பன் மட்டும் நாரதரை வணங்காமல் அலட்சியமாக அமர்ந்திருந்தான். உரிய நேரத்தில் சாம்பனுக்குப் பாடம் புகட்டலாம் என்று கருதிய நாரதர் அப்போது வாளாவிருந்தார்.
உரிய நேரம் வந்தது. ஒரு தடாகத்தில் சாம்பன் பல பெண்களுடன் நீர் விளையாட்டில் திளைத்திருந்தான். சாம்பனின் அழகில் ஈடுபாடு கொண்ட அப்பெண்கள் கிருஷ்ணரையும் அலட்சியம் செய்தனர். அதனால், வெகுண்ட கிருஷ்ணர் சாம்பனைத் தன் மகன் என்றும் பாராமல் கடுமையாகச் சபித்துவிட்டார்.
“அழகால் ஆணவம் கொண்ட சாம்பனே! உனக்குத் தொழுநோய் உண்டாகட்டும்!” என்று சபித்துவிட்டார் கிருஷ்ணர். அவ்வாறே, சாம்பனைத் தொழுநோய் பற்றிக் கொண்டது. மக்கள் அவனைக் காண்பதைத் தவிர்த்தனர். சாம்பன் மற்றவர் கண்ணில் படாமல் தனிமையில் வாழ்ந்து வந்தான். தன் மகனைக் கோபத்தினால் சபித்து விட்ட கிருஷ்ணர் அது குறித்து வருந்தினார். சாம்பன் நாரதரை அவமதித்ததன் விளைவாகவே அனைத்தும் நிகழ்ந்தன என்பதை உணர்ந்த கிருஷ்ணர் சாம்பனிடம் சென்று ஆறுதல் கூறினார். நாரதரை அணுகி உரிய சாபவிமோசனம் பெறவும் அறிவுறுத்தினார்.
நாரதரின் வருகைக்காகக் காத்திருந்தான் சாம்பன். அடுத்த முறை நாரதர் துவாரகைக்கு வந்தார். அப்போது சாம்பன் அவரிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டான். நாரதரைப் பணிவுடன் வணங்கிய சாம்பன் தொழுநோயிலிருந்து விடுபடும் வழியைக் கூறியருள வேண்டினான்.
நாரதர் தமது பயணத்தின் பொழுது, சூரியனின் உலகத்தைக் கண்டதாகவும், அங்கு சூரியன் அனைத்துத் தேவர்களாலும் வணங்கப்படும் சிறப்புடன் வீற்றிருந்ததாகவும் கூறினார். சாம்பன் சூரியனைப் பற்றிய முழு விவரங்களையும் அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டான். பிரளயம் என்ற பெருவூழி முடிந்து மீண்டும் உலகங்கள் தோன்றிய விவரங்களை நாரதர் சாம்பனுக்கு முதலில் விளக்கினார்.
நவபிரஜாபதிகளில் ஒருவராகிய தட்சர்-அதிதிதேவி தம்பதி ஒளிவடிவிலான ஓர் அண்டத்தைப் பெற்றெடுத்தனர் என்றும், அதுவே சூரியன் என்றும் உரைத்தார் நாரதர். சூரியபகவான் தனது கதிர்களால் ஆகாயம், பூமி, நீர் ஆகியவற்றை வெப்பமடையச் செய்கிறார். சூரியபகவான் தனது கதிர்களால் கடல் முதலான நீர்நிலைகளிலுள்ள நீரைக் கிரகித்துக் கொள்கிறார்.
சூரியன் தோன்றி, சூரியக் குடும்பத்திலுள்ள உலகங்கள் தோன்றி, அவற்றில் உயிர்களும் தோன்றின. பின்னர் சுடர்க்கடவுளாகிய சூரியன் பன்னிரண்டு வடிவங்களை எடுத்துக்கொண்டு, பன்னிரண்டு வகையான செயல்களைப் புரிகிறான். அப்பன்னிருவரும் 'துவாதச ஆதித்யர்கள்' என்று அழைக்கப்பட்டனர். துவாதசம்-பன்னிரண்டு, ஆதித்யர்கள்-சூரியர்கள்.
1. சூரியனே இந்திரன் என்ற பெயரிலிருந்து வானத்து தேவர்களைக் காத்து வருகிறான்.
2. தாதா என்ற வடிவத்திலிருந்து படைத்தல் தொழிலைச் செய்கிறான்.
3. பர்ஜன்யன் என்ற பெயருடன் இருந்து சூரியன் உலகத்தில் மழையைப் பெய்விக்கிறான்.
4. பூஷா என்ற பெயருடன் இருந்து உணவுப் பொருள்களை விளைவித்தும், உயிர்களுக்கு ஊட்டச்சத்துகளை அளித்தும் உதவுகிறான்.
5. துவஷ்டா என்ற பெயருடன் மூலிகைகளின் சக்தியாக இருந்து மக்களின் நோய்களைப் போக்கி நல்வாழ்வை அளிக்கிறான்.
6. அரியமான் என்ற பெயருடன் இருந்து மூச்சுக் காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்கிறான்.
7. பகன் என்ற பெயரிலிருந்து உயிர்களுக்கு நலன்களை வழங்குகிறான்.
8. விவச்சுவான் என்ற பெயருடன் உயிர்களுக்கு ஜாடராக்கினி என்னும் ஜீரணசக்தியை அளித்தும், உடல் வெப்பம் சீராக இருக்கச் செய்தும் உதவுகிறான்.
9. விஷ்ணு என்ற பெயருடன் இருந்து தேவர்களுக்கு எதிரான சக்திகளை அழிக்கிறான். (நல்ல எண்ணமும் செயல்களுமே தேவர்கள். அவற்றுக்கு எதிரான தீய எண்ணங்களும் செயல்களுமே அசுரர்கள்.)
10. அம்சுமான் என்ற பெயருடன் வாயுக்களின் வடிவத்திலிருந்து உதவுகிறான்.
11. வருணன் என்ற பெயருடன் தண்ணீரின் வடிவத்தில் இருக்கிறான். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிப்பவன் இவனே.
12. மித்திரன் என்ற பெயருடன் இருந்து சந்திரபாகா நதிக்கரையில் அமர்ந்து தவம் புரிகிறான். எதற்கு? உயிர்களுக்கு நலன்கள் யாவும் கிடைப்பதற்கே!
“மித்ரன் என்ற பெயருடன் இருந்து, சூரியன் ஏன் தவம் இயற்றுகிறான்?” என்று பிருஹத்பலன் வசிஷ்டரிடம் வினவினான். “சூரியனிடமிருந்தே அனைத்தும் தோன்றின. அவனே சர்வ வல்லமை பெற்ற தெய்வம். அவனே தவம் புரிபவர்களுக்கு வரங்களை அருள வல்லவன். எனினும், அனைத்துக்கும் மேலான பரம்பொருள் உள்ளது. நம்முள் இருக்கும் அப்பொருளை அறிய முதலில் நாம் நம்மையே அறிதல் வேண்டும். அதுவே ஆத்மதரிசனம் அல்லது தன்னையறிதல் ஆகும். அத்தகைய முயற்சியில் உலகத்தின் முதல்வனாகிய சூரியன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உலகத்தினருக்கு வழிகாட்டினான்!” என்று விளக்கினார் வசிஷ்டர்.
முழு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பதினாறு பண்புகளை வால்மீகி பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று, 'ஆத்மவான்' என்பதாகும். மனிதர்கள் அனைவரும் ஆத்மாவை அறியும் உயர்நிலை முயற்சியில் ஈடுபடுதல் இயலாது. அப்படியானால், 'ஆத்மவான்' என்பதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும் அல்லவா?
சுயமதிப்பீடு : தனிமனித மேம்பாட்டுக்கு, 'செல்ஃப் அஸெஸ்மெண்ட்' என்னும் சுயமதிப்பீடு தேவை என்று தற்கால மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள் கூறுகின்றனர். தனது குறை, நிறைகளை அறிந்து, அதற்கேற்ற வகையில் செயற்பட்டால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். சாதனைகளும் நிகழ்த்தலாம். இத்தகைய சுயமதிப்பீடு செய்தவர்களும் ஆத்மவான்கள் (தன்னை அறிந்தவர்கள்) ஆவார்கள். ஆகவே, சூரியன் மித்திரன் என்ற பெயருடன் இருந்து தன்னை அறியத் தவம் செய்ததன் காரணம், “மக்கள் தமக்கு மேலான பரம்பொருளை அறியவும், தன்னை உயர்த்திக் கொள்ளவும், சுயமதிப்பீடு செய்தல் வேண்டும்” என்று அறிவுறுத்தவே ஆகும். அதுவே இப்புராண வரலாறு உணர்த்தும் உட்பொருள் ஆகும்.
சூரியனின் தேர் : சூரியனின் தேர்(ரதம்) பொன்மயமாக விளங்கும். அத்தேருக்கு ஒரே சக்கரம்தான் உண்டு. ஓர் ஆண்டை (சம்வத்சரம்) ஒற்றைச் சக்கரம் குறிப்பாக உணர்த்துகிறது. ஒற்றைச் சக்கரத்தில் ஆறு கட்டைகள் உள்ளன. அவை ஆறு பருவங்களை (ருதுக்கள்) உணர்த்துகின்றன. உத்தராயணம், தட்சிணாயணம் இரண்டையும் முறையே தேரின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் உணர்த்துகின்றன. சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. அவை, காயத்ரி முதலான ஏழு சந்தஸ்களே என்பர். அருணன் என்பவன் சூரியத் தேரின் ஓட்டுநர் (சாரதி) ஆவார். அவர் சிவந்தநிறம் உடையவர். ஓர் ஊர்தியின் ஓட்டுநரே முதலில் கண்ணில் படுவார்.
அதுபோல், சூரியத் தேரின் ஓட்டுநர் அருணனின் செவ்வொளியே சூரிய உதயத்திற்கு முன்னால் நமக்குத் தெரிகிறது. கீழ்வானில் சிவந்த ஒளி தோன்றும் அந்த விடியல் நேர்த்தை, 'அருணோதயம்' என்று கூறுவர். “அருணன் இந்திரன் திசை அணுகினன்” என்று தமது திருப்பள்ளியெழுச்சியில் மணிவாசகர் குறிப்பிட்டுள்ளார்.
பெயர்ப் பொருத்தம் : சூரியன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான் ஆகும். இந்தியாவில், சூரியன் முதலில் அருணாசலப் பிரதேசத்தில் உதிக்கிறார் என்பது அறிவியல் கண்ட உண்மை. அருணோதயம் என்னும் சூரியனின் செவ்வொளி முதலில் தோன்றும் மாநிலத்திற்கு அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாக உள்ளது! அருணம்-சிவப்பு.
ஐசக்நியூட்டனுக்கு முன்னால்! : ஐசக்நியூட்டனின் நிறப்பிரிகைக் கொள்கை மிகவும் பிரபலமானதே. ஒரு வட்டமான தகட்டின் ஏழு சமமான பகுதிகளில் வானவில்லின் ஏழு நிறங்களைப் பூசி, அத்தகட்டை வேகமாகச் சுழற்றினால், அத்தட்டு வெண்மையாகவே தெரியும். மற்ற ஏழு நிறங்களும் வெண்மைக்குள் ஐக்கியமாகிவிடும். அத்தகைய ஆராய்ச்சித் தட்டையே, 'நியூட்டனின் வட்டத்தகடு' என்று கூறுவர்.
ஒரு படிகக்கல்லின் வழியே சூரிய ஒளியைச் செலுத்தினால், அந்த ஒளி, ஏழு வண்ணங்கள் உடைய ஒளிக்கற்றையாக வெளிப்படும். ஒவ்வொரு கடவுளுக்கும் உரியதாக ஒவ்வொரு கல்லைக் குறிப்பிடுவதுண்டு. அவ்வகையில் 'நிறப்பிரிகை' ஏற்படுத்தும் படிகக் கல்லையே சூரியனுக்கு உரிய கல்லாக நமது முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிப் பயணம் செய்கிறான் என்று புராணக் குறியீடு ஒளியின் ஏழு வண்ணக்கூறுகளை உணர்த்துகின்றன.
சாகத்தீவு : ஆன்மிக நூல்கள் பூமண்டலத்தை ஏழு தீவுகளாகக் குறிப்பிட்டன. நாம் 'ஜம்பூத்துவீபம்' என்னும் நாவலந்தீவில் வாழ்கிறோம். சூரியனின் தீப்பிழம்புகளில் சில சாகத் தீவில் கடலில் புகுந்ததாகப் புராணம் கூறுகிறது. தற்காலத்தில் ஈரான் என்று வழங்கிவரும் பாரசீகமே சாகத் தீவாக இருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். வேத மதத்தை ஒத்திருந்த பாரசீக மதத்தினர் பலர் இந்தியாவில் குடியேறிவிட்டனர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சாம்பன் எழுப்பிய சூரியக் கோயிலில் பூஜைகள் செய்யத் தகுந்த சான்றோர்களான மகர் என்ற வகுப்பினரை, சாகத்தீவிலிருந்து அழைத்து வந்ததாகச் சூரிய புராணம் உரைக்கிறது. மகர்கள் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஈரானியர்கள் தங்கள் இடையில் புனிதமான ஓர் ஆபரணத்தை அணிவார்கள். சூரியனுக்காக எழுப்பப்பட்ட திருக்கோயில்களிலுள்ள சூரியனின் படிமங்களில் ஈரானியர் அணியும் அந்த இடை ஆபரணம் அழகு செய்கிறது. இதுவே, மகர்கள் ஈரானியர்கள் என்பதற்கு ஓர் ஆதாரமாக உள்ளது.
சாம்பன் செய்த தவம் : கிருஷ்ணனின் குமாரன் சாம்பனுக்குச் சூரியனைப் பற்றிய செய்திகளைக் கூறினார் நாரதர். சூரிய பகவானை நோக்கித் தவம் செய்து தொழுநோயிலிருந்து விடுபடலாம் என்றும் கூறி வாழ்த்தி அனுப்பினார். சாம்பன் தன் தந்தை கிருஷ்ணனைக் காணச் சென்றான். மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத தனது நோயை சூரிய வழிபாட்டின் வழியே தீர்த்துக் கொள்ள நாரதர் அறிவுறுத்திய செய்தியைக் கூறினான்.
சாம்பன் கிருஷ்ணரை வலம் வந்து வணங்கினான். கிருஷ்ணர். “சாம்பா! தேவரிஷி நாரதரின் ஆசி உனக்குக் கிடைத்துவிட்டது! சூரிய பகவானின் அருளால் நீ விரைவில் நோய் நீங்கி, துவாரகைக்குத் திரும்புவாய்!” என்று ஆசி கூறி அனுப்பினார்.
துவாரகையிலிருந்து புறப்பட்ட சாம்பன் சந்திரபாகா நதியைக் கடந்து சூரியன் பெயரால் அழைக்கப்படும் மித்திரவனத்தை அடைந்தான். உலகத்தவர் வியக்கும் வண்ணம் ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தையும் ஒருநிலைப்படுத்தி, சூரியனைச் சிந்தையில் நிறுத்திக் கடுந்தவம் இயற்றினான். உள்ளத்தில் நிலைநிறுத்திய சூரியனைப் போலவே சாம்பனின்
மேனியும் ஒளிவீசத் தொடங்கியது. அவனுக்குத் திருவருள் செய்திடச் சூரிய பகவான் அவன் முன்னால் தோன்றினார்.
சூரிய பகவானைக் கண்ட சாம்பன் ஆனந்தக் கண்ணீர் பொழிய, இருகரம் கூப்பித் தொழுதான். அவரது திருவடியில் விழுந்து வணங்கினான், சூரிய பகவான் குறுநகை பூத்த முகத்துடன் பேசலானார். “ஜாம்பவதியின் குமாரனே! உனது தவத்தால் மகிழ்ந்தேன். நீ வேண்டும் வரங்களைக் கேட்டுப் பெறலாம்” என்றார். “சுடர்க்கடவுளே! தங்களின் தரிசனம் கிடைத்த பிறகு வேறென்ன வேண்டும்? தங்களிடம் மாறாத பக்தி இருந்தால் போதும்!” என்று சாம்பன் பணிவாகக் கூறினான். வேண்டிய வரத்தைக் கேட்டுப் பெற்றிடத் தயங்கினான் சாம்பன். பின்னர், தனது தொழுநோய் நீங்க வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்துரைத்தான்.
சாம்பன் வேண்டியபடி, சூரியனின் அருட் பார்வை பட்டு, சாம்பனின் தொழுநோய் விலகியது. பொன்மேனி பெற்ற சாம்பன் மீண்டும் சூரியனை வணங்கினான். “சாம்பா! பூவுலகில் உன் பெயர் மிகவும் பிரபலமடையப் போகிறது. இந்த சந்திரபாகா நதிக்கரையில் என்னைப் பிரதிஷ்டை செய்து வழிபடுக! இப்பகுதி உன் பெயரால், 'சாம்பபுரம்' என்று அழைக்கப்படும். இங்கு வந்து என்னைத் தரிசிப்பவர்களுக்கு நோய்கள் நீங்கும். அவர்கள் அனைத்து நலன்களும் அடைவார்கள். உனது விருப்பப்படி நான் அன்றாடம் உனக்குக் கனவில் காட்சி அளிப்பேன்!” என்று சூரிய பகவான் சாம்பனுக்குக் கூறியருளினார். சாம்பன் பெருமகிழ்ச்சி எய்தினான்.
ஆற்றில் கிடைத்த ஆதித்தன் படிமம் : சந்திரபாகா நதிக்கரையில் இருந்த மித்திரவனத்தில் முனிவர்கள் பலரும் சூரியனை வழிபட்டு வந்தனர். தான் சூரிய பகவானுக்குத் திருக்கோவில் கட்ட விரும்புவதாக, சாம்பன் முனிவர்களிடம் கூறினான். அவர்களும் அதே விருப்பத்தைத் தெரிவித்தனர். சாம்பன் சந்திரபாகா ஆற்றில் நீராடச் சென்றான். அவனுடன் முனிவர்களும் சென்றனர். வானத்தில் வந்து கொண்டிருந்த சூரியனின் உருவம் சந்திரபாகா ஆற்றின் நீரில் பிரதிபலித்தது. அதைக் கண்ட சாம்பனின் உள்ளம் நெகிழ்ந்தது. சூரிய பகவானை நேரில் கண்டது போன்ற உணர்வு மேலிட்டது.
அதே உணர்வோடு ஆற்று நீரைக் கையில் அள்ளினான் சாம்பன். என்ன விந்தை! சாம்பன் கையில் ஆற்று நீர் அகப்படவில்லை சூரிய பகவானின் படிமம் அவனுடைய கைகளில் எழுந்தருளியது. சாகத்தீவிலிருந்து மகர் வகுப்பைச் சேர்ந்த சான்றோர்களை அழைத்து வர கிருஷ்ணன் தன்னுடைய கருடவாகனத்தைக் கொடுத்துதவினார். கருடபகவான் சாம்பனைச் சுமந்து சென்று சாகத்தீவில் இறக்கினார். அங்கு, சாம்பன் மகர் வகுப்பைச் சார்ந்த சான்றோர்களைக் கண்டு வணங்கினான். தான் துவாரகை வேந்தன் கண்ணனின் மகன் என்று அறிமுகம் செய்து கொண்டான். சூரிய பகவான் கூறிய செய்திகளை அவர்களிடம் எடுத்துரைத்தான். நாவலந்தீவிலுள்ள சந்திரபாகா நதிக்கரைக்கு வந்து, சூரியனுக்கு உரிய பூஜைகளை நடத்தித் தருமாறு வேண்டினான்.
“கிருஷ்ண குமாரரே! நாங்கள் தங்களுடன் உடனே புறப்படத் தயாராக உள்ளோம். ஏனெனில், தங்கள் வருகை குறித்து முன்னரே சூரிய பகவான் எங்களிடம் கூறிவிட்டார்!” என்றனர் மகர்குலச் சான்றோர்கள்.
அச்சான்றோர்களையும், சாம்பனையும் ஏற்றிக் கொண்டு கருடபகவான் சந்திரபாகா நதிக்கரைக்குத் திரும்பினார். மகர் பெருமக்களின் ஆலோசனைப்படி, சூரியன் அளித்த படிமத்தைச் சாம்பன் பிரதிஷ்டை செய்தான். அவர்கள் அன்றாட பூஜைகளைச் சிறப்பாக நடத்தி வந்தனர். “ஜம்பூத்தீவு என்ற நமது நாட்டில் முன்னர் சூரியனை நேரில் கண்டு வணங்கிப் போற்றினர். சாகத் தீவிலிருந்து சூரியனின் படிமவழிபாடு நம்நாட்டுக்கு வந்தது” என்று சூரிய புராணம் உரைக்கிறது.
No comments:
Post a Comment