ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீரங்கநாயகி ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ரஹ்மணே நம:
லக்ஷ்மீ தந்த்ரம் – ஓர் அறிமுகம்
லக்ஷ்மீ தந்த்ரம் என்னும் இந்தப் பாஞ்சராத்ர ஆகம நூலானது, பெயருக்கு ஏற்றபடி, மஹாலக்ஷ்மியைப் பற்றியதாகும். இதில் மஹாவிஷ்ணுவிற்குச் சமமான இடத்தில் மஹாலக்ஷ்மி வைக்கப்பட்டு, அவளைத் துதிப்பது கூறப்பட்டுள்ளது. இந்த நூலின் 50 ஆவது அத்தியாயத்தில் புருஷஸூக்தம் மற்றும் ஸ்ரீஸூக்தம் ஆகியவற்றைப் பற்றி நன்கு விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் பல இடங்களில் மஹாலக்ஷ்மியே தனது திருவாய் மலர்ந்தருளியுள்ளது மிகவும் சிறப்பாகும்.
மிகவும் உயர்ந்த இந்த நூலைப் பற்றிய குறிப்புகளோ, புத்தகங்களோ அதிகமாக வெளிவராமல் உள்ளது வியப்பாகவே உள்ளது. இந்த இணையதளம் மூலமாக, ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவுள்ளத்துடன் அடியேன் அன்றாடம் மூன்று ச்லோகங்களுக்கு – ச்லோகம் மூலம், பொருள் ஆகியவற்றை முனைய உள்ளேன். இதற்கு நம்பெருமாளும், எம்பெருமானாரும் பக்கபலமாக நிற்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.
1-1 நமோ நித்யாநவத்யாய ஜகத: ஸர்வஹேதவே
ஞானாய நிஸ்தரங்காய லக்ஷ்மீநாராயணாத் மநே
பொருள் – மிகவும் தூய்மையானதும், தோஷங்கள் அற்றதும், உலகின் காரணமாக உள்ளதும், அனைத்திற்கும் காரணமாக உள்ளதும், ஞானமயமாக உள்ளதும், மாற்றம் அடையாமல் உள்ளதும், லக்ஷ்மி – நாராயணன் ஆகிய இருவருக்கும் ஆத்மாவாக உள்ளதும் ஆகிய அதனை (ப்ரஹ்மம்) வணங்குகிறேன். (இங்கு லக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் ஆத்மாவாக வேறொரு உயர்ந்த வஸ்து உள்ளதாகக் கூறப்பட்டாலும், இந்த வஸ்துவும் நாராயணனும் ஒன்றே என பின்னர் கூறப்பட உள்ளது. இதே கருத்தை ப்ரஹ்ம சூத்திரத்தில் 3-2-30 முதல் 3-2-36 வரை காணலாம் – இந்த சூத்திரங்கள் அடியேனின் கடந்த நம்பெருமாள் விஜயத்தின் ஸ்ரீபாஷ்ய பகுதியில் உள்ளது).
1-2 ககாஸனம் க்ருணாதாரமீத்ருசம் ஸோமபூஷிதம்
அகலங்கேந்து ஸூர்யாக்நிம் லக்ஷ்மீரூபம் உபாஸ்மஹே
பொருள் – பறவை ஒன்றின் மீது அமர்ந்துள்ளவளும், கருணை ஒன்றே வடிவமாக உள்ளவளும், ஸோமனால் ஆராதிக்கப்படுபவளும், தோஷங்கள் அற்றதான சந்திரன்-சூரியன் -அக்னி ஆகியவற்றின் சேர்க்கை போன்று உள்ளவளும் ஆகிய லக்ஷ்மியின் ரூபத்தை நான் ஆராதிக்கிறேன் (இங்கு பறவை என்பது ஆந்தையைக் குறிப்பதாகவும் கொள்ளலாம் – காரணம் வடநாட்டினர் ஆந்தையை லக்ஷ்மியின் வாகனமாகக் கொள்வர்; அல்லது கருடன் என்று கொள்ளலாம்).
1-3 வேதவேதாந்த தத்த்வஜ்ஞம் ஸர்வ சாஸ்த்ர விசாரதம்
ஸர்வ ஸித்தாந்த தத்த்வஜ்ஞம் தர்மாணாமாகதாகமம்
பொருள் – (அத்ரி முனிவர் குறித்துக் கூறப்படுவது) வேதவேதாந்தங்களில் கூறப்படும் தத்துவங்களை முழுமையாக அறிந்தவர்; அனைத்து சாஸ்த்திரங்களையும் ஆராய்ந்து அறிந்தவர்; அனைத்து ஸித்தாந்தங்கள் குறித்த ஞானம் உள்ளவர்; அனைத்து தர்மங்கள் குறித்தும், அவற்றின் ஆகமம் குறித்தும் நன்கு அறிந்தவர் …. (அடுத்த ச்லோகத்தில் தொடரும்)
No comments:
Post a Comment