telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Friday, 22 May 2015

'நவகலேவரா' பண்டிகை


எந்த ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மூல தெய்வங்களின் சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றி அமைக்க மாட்டார்கள். தினமும் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர ஒலிகளினால் மேலும் மேலும் அந்த சிலைகளுக்கு சக்தி ஏறுகிறது என்பது ஐதீகம். கற்சிலைகளையோ அல்லது உலோகங்களினால் செய்யப்பட்ட சிலைகளையோ மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் என்றால் இயற்கையின் காரணத்தால் அவை உடைந்து அல்லது பழுதடைந்து போகலாமே தவிர அவை அழிவது இல்லை. அதனால்தான் ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேக விழாவில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் ஓதி ஆலய சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் செய்து ஏற்கனவே உள்ள சிலைக்கு மேலும் சக்தியூட்டுவார்கள். விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் அஷ்டபந்தனம் அதாவது கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதி லிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டு வகை மருந்துகள் கலந்த கலவையைச் சாற்றுவது வழக்கம். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டு வகை மருந்துகளை பூசுவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர். எந்த ஆலயத்தில் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தனம் சாற்றி விக்ரகங்களை அதன் மீது பிரதிஷ்டை செய்துள்ளார்களோ அந்த ஆலயங்களில் மட்டுமே சாதாரணமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்து விட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி அந்த பீடத்திலேயே அதே ஸ்வாமி சிலையை மீண்டும் ஸ்தாபனம் செய்தற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். அதே சமயத்தில் பீடத்தில் இருந்து எடுத்து மீண்டும் வைக்கப்படும் விக்ரகங்களுக்குப் பதில் வேறு புதிய விக்ரஹத்தை அங்கு ஸ்தாபனம் செய்ய மாட்டார்கள். இயற்கையினால் மூலவரின் சிலை பழுதடைந்து போனால் ஒழிய மூலவரை மாற்றி அமைக்க மாட்டார்கள். ஆனால் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ள மூலவரின் சிலைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு புராதன பழக்கம் பூரி ஜகன்னாதரின் ஆலயத்தில் மட்டுமே தொடர்ந்து கொண்டு உள்ளது என்பது வியப்பான செய்தி ஆகும். 12 அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு வருடத்தில் 'அதிக மாசம்' அல்லது 'ஆஷாட' எனும் மாதம் இருமுறை சேர்ந்து வரும் (ஜூன் மற்றும் ஜூலை மாத இடையில்). அதுவே முக்கியமான வருடமாகக் கருதி அந்த ஆண்டில் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூல மூர்த்திகளாக உள்ள ஜகன்னாதர், சுபத்திரை,ஜகன்னாதரின் சகோதரரான பாலபத்திரர் மற்றும் சுதர்சனம் (விஷ்ணுவின் சக்ரம்) எனும் நான்கு பேர்களது சிலைகளையும் அதே மாதிரியான புதிய சிலையை வடிவமைத்து 'நவகலேவரா' என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையில் மாற்றி அமைப்பார்கள். 1996 ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற
19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஆண்டு அதாவது 2015 ல் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. பல்வேறு பஞ்சாங்கங்கள், ஆலய வரலாறு, ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்களின் கூற்றின்படி 1575 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை இருபத்தி மூன்று முறை இரட்டை 'ஆஷாட' மாதங்கள் வந்த வருடங்களில் நவகலேவரா பண்டிகை நடைபெற்று இந்த ஆலயத்தில் சிலைகள் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிகின்றது. ஆகவே இந்த வருடம் நடைபெறும் நவகலேவரா பண்டிகை இருபத்தி நான்காம் முறை நிகழும் பண்டிகை ஆகும். பன்னிரண்டு (12) அல்லது பத்தன்பொது (19) ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நபகலேபரா 65 நாட்கள் தொடரும் பண்டிகை ஆகும். பூரி ஆலயத்தில் உள்ள நான்கு தெய்வங்களும் மரத்தில் வடிவமைக்கப்பட்டவை. மரம் காலப்போக்கில் அழிவுறும் தன்மைக் கொண்டது. ஆகவேதான் இந்த சிலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றனவாம். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த காலத்தில் பாரதம் என அழைக்கப்பட்ட நம் நாட்டில் பல்வேறு ஆலயத்திலும் உள்ள மூலவர்களுடைய அல்லது உற்சவ மூர்த்திகளின் சிலைகள் அனைத்துமே கற்பாறைகள், கரும்கற்கள், நவபாஷணங்கள், சுடப்பட்ட மண் கலவை, அல்லது சில குறிப்பிட்ட உலோகங்களில் மட்டுமே செய்யப்பட்டு உள்ளன. கிராம தேவதைகள் அல்லது கிராம தெய்வங்களின் சிலைகள் கூட மண்ணினாலும், கல்லினாலும் செய்யப்பட்டு இருக்க, அவை அனைத்துக்கும் மாறாக பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மட்டுமே மரத்திலான சிலைகள் சன்னதியில் உள்ளன. மனிதர்களுக்கு இறப்பும் பிறப்பும் உள்ளதைப் போலவே தெய்வங்களுக்கும் இறப்பும் பிறப்பும் உள்ளது என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டவே இந்த நியதியை விஷ்ணு பகவான் உருவாக்கி வைத்தாராம். சிற்பக் கலைகளைப் பற்றி விவரமாக எடுத்துரைக்கும் புராண நூலான 'ஷில்பசாஸ்திரா' என்பதின்படி ஆலயங்களில் வடிவமைக்கப்படும் சிலைகளுக்கு சில குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே உயிர் இருக்குமாம். ரத்தினக் கற்களினால் மற்றும் இயற்கைக் கற்களினால் செய்யப்படும் சிலைகளின் ஆயுள் 10,000 வருடங்கள், உலோகத்தினால் செய்யப்படுபவைகளுக்கு 1000 வருடங்கள், மண் சிலைகள் ஒரு வருடம் மற்றும் மரங்களில் செய்யப்பட்டவை 12 வருடங்கள் ஜீவன் உள்ளதாக இருக்கும் என்பதாக கூறப்பட்டு உள்ளது. நபகலேபரா என்ற இந்த வைபவம் ஒரு விதத்தில் பார்த்தால் ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் போலவே தோன்றும் என்றாலும், இதற்கும் கும்பாபிஷேகத்துக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. மரத்தில் வடிவமைக்கப்பட்ட தெய்வ சிலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. பிற ஆலயங்களில் செய்யப்படுவதைப் போல கும்பாபிஷேகம் செய்து பழைய சிலையையே மீண்டும் பீடத்தில் அமர்த்தி வைக்காமல், கும்பாபிஷேகம் போன்ற வைபவத்தை செய்து அதன் முடிவில் புதிய சிலையை, தெய்வீக தன்மைகளைக் கொண்ட, வேப்ப மரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய சிலையை, பழைய சிலைகளில் உள்ள சக்தியை வெளியில் எடுத்து புதிய சிலைகளில் அவற்றை செலுத்தி, அவற்றை ஆலய பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்வதை நபகலேபரா என்கிறார்கள். பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த வைபவத்தில் முக்கியமானவை:- ஆஷாட மாதத்தில் திருவிழா துவக்கம் சிலைகளுக்கான மரத்தைக் கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை மரங்களைக் கண்டு பிடித்து அதை எடுத்து வருவது சிலை வடிவமைப்பு சிலைக்குள் பிரும்மாவின் சக்தியை செலுத்துதல் சிலைகளை தேரில் ஏற்றி ஊர்வலம் செல்லுதல் தேரை ஆலயத்துக்கு திரும்பக் கொண்டு வருதல் சிலைகளுக்கு அழகூட்டி ஆபரணங்களை அணிவித்தல் பிரசாதம் படைத்தல் சிலைகளை மீண்டும் சன்னதியில் கொண்டு சேர்த்தல் பழைய சிலைகளை மண்ணில் போட்டு புதைத்து விடுவது மனிதர்களுக்கு இறப்பும் பிறப்பும் உள்ளதைப் போலவே தெய்வங்களுக்கும் உள்ளது என்ற தத்துவத்தைக் எடுத்துக் காட்டுவதைப் போன்ற இந்தப் பழக்கம் ஒரிஸ்ஸா மானிலத்தில், நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த பூரி ஜகன்னாத் ஆலயத்தில் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள கடவுள் பூமியிலே உயிரோடு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் பழைய உடலை துறந்து இன்னொரு உடம்பில் அவர் குடி புகுந்து கொள்வதான ஐதீகத்தின் அடிப்படையில் நபகலேபரா திருவிழா நடைபெறுகிறது. நபா என்றால் 'புதிய' என்றும் கலேபரா என்றால் 'உடல்' என்பதாகவும் அர்த்தமாம். அதாவது பல தெய்வங்கள் பல்வேறு காரணங்களினால் பூமியிலே அவதரிக்கின்றன. தெய்வமே ஆனாலும் பூமியிலே அவதரிக்கும் எந்த உடலுக்கும் அழிவுண்டு என்றும் அதில் உள்ள தெய்வீக ஆத்மா புதிய உடலில் புகுந்து கொண்டு புதுத் தோற்றத்தை அடைந்தாலும் அதனுள் உள்ள ஆத்மாவின் தெய்வீகத் தன்மை மாறுவதில்லை என்பதை உணர்த்தவும், தம்முடைய தெய்வீக தத்துவத்தை நிரூபிக்கவும் புதிய உடலோடு தோன்றி ஆலயத்திலே அமர்கிறார் பூரி ஜகன்னாதர். எப்படி ஒருவர் தன்னுடைய உடைகளை மாற்றிக் கொள்கின்றாரோ அப்படித்தான் பூரி ஸ்ரீ ஜகன்னாதரும் தமது குடும்பத்தினருடன் நபகலேபரா விழாவின்போது பழைய உடலை துறந்து புதிய உடலில் குடி புகுந்து கொள்கிறார் என்கிறார்கள். இதன் பின்னணி கதை என்ன? ஆகவே முதலில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டதாக நம்பப்படும், சத்யயுகத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் எழுந்த அற்புதமான கதையைப் பார்க்கலாம். thanks to Santhipriya's pages