கோயில் நன்னா வரும்!’ — மகா ஸ்வாமிகளின் ஆசி
காஞ்சி மகா பெரியவரது கருணை கடாட்சத்தில் திளைக்கச் செய்த- எனது வாழ்வில் நிகழ்ந்த ஓர் அற்புத சம்பவம்: சுமார் 45 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் குடும்பத்துடன் சென்னை பெரம்பூரில் உள்ள திரு.வி.க. நகரில் வசித்து வந்தோம். அந்தப் பகுதியில் சிம்சன் குரூப், பி-அண்ட்-சி மில் மற்றும் அரசு ஊழியர்கள் குடியிருந்தனர்.
எங்களுக்கென குடியிருப்போர் சங்கம் ஒன்று இருந்தது. எனினும், ஸத் சங்கம் ஒன்று ஆரம்பிக்க விரும்பினோம். ஸத் ஸங்கம் துக்கம் ப்ரஸயமதி… அதாவது, சாதுக்கள் மற்றும் நல்லவர்கள் கூடும் சங்கம், துக்கத்தை தணிக்கும் என்பர். அதற்கேற்ப நாங்கள் துவக்கிய ஸத் சங்கம் மூலம் ஏழை மாணவர்களுக்கும், துன்பத்தில் உழல்பவர்களுக்கும் சிறு சிறு உதவிகள் செய்து வந்தோம். தவிர, சனிக்கிழமைகளில் அன்பர்கள் சிலரது இல்லங்களில் அனுமன் திருவுருவப் படத்தை வைத்து, நாமசங்கீர்த்தனம் செய்வதும் வழக்கம்.
இந்த நிலையில், அப்போது திரு.வி.க. சிலை அருகே இருந்த காலி இடத்தில், விநாயகர் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களில் சிலர் விரும்பினர். அதற்காக குழு அமைத்து, நிதி திரட்ட தீர்மானித்தோம். குழுவில், நான் உட்பட… சுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி ஐயர், னிவாசன், ரங்காச்சாரி, மணி, எத்திராஜ், தரணிபதி, கோதண்டபாணி, பாளே கெட்டே பத்மனாப ராவ் என்று பலரும் இடம் பெற்றோம். நிதி திரட்டும் பணி துவங்கியது. முன்னதாக காலியிடத்தில், குடிசை அமைத்து உள்ளே விநாயகரை வைத்து வழிபட ஆரம்பித்தோம்.
நாட்கள் கழிந்தன. போதுமான நிதி கிடைக்க வில்லை. எங்கள் சேர்மனும், சிம்சன் குரூப் அதிபருமான அனந்தராம கிருஷ்ணனை சந்தித்து ஆலய திருப்பணி குறித்து விளக்கினோம். அவர், ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்தார். அந்தக் காலத்தில் இது பெரிய தொகை. அனந்த ராம கிருஷ்ணன் பணம் கொடுத்த நேரம், நிதி மளமளவென்று சேர்ந்தது. எனினும், கோயில் கட்டுவதற்கு அது போதுமானதாக இல்லை.
குழுவில் இருந்த அன்பர் ஒருவர், ”காஞ்சி புரம் போய் மகா ஸ்வாமிகளை தரிசிப்போம். அவர் அனுக்கிரகம் பண்ணி ஆசிர்வதித் தால், பெரிய பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு நிதி திரட்டலாமே!” என்றார். எங்களுக்கும் அது சரி என்றே பட்டது.
காஞ்சி மடத்தை தொடர்பு கொண்டோம். ”பெரியவா வட தேச யாத்திரை போயிருக்கா. மடத்துக்கு எப்போ திரும்புவாள்னு தெரியலே. ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணுங்கோ… பெரியவாகிட்டேருந்து சேதி வந்தா சொல்றோம்!” என்றனர்.
தொலைதொடர்பு வசதிகள் விரிவடையாத காலம் அது. அதையும் மீறி, காஞ்சி மடத்துக்கு அவ்வப்போது சிரமப்பட்டு போன் போட்டு, கனெக்ஷன் பெற்று விசாரித்துக் கொண்டிருந் தோம். மகா பெரியவாள், சென்னை வருவதாக எதுவும் தகவல் இல்லை.
அன்று புதன்கிழமை. இரவு உறக்கத்தில் ஒரு கனவு: மகா ஸ்வாமிகள் நெல்லூரில் இருந்து புறப்பட்டு பெரம்பூர் வழியாக வந்து, ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டியார் பள்ளி யில் முகாமிட்டிருப்பதாகத் தகவல் வர… நாங்கள் ஓடோடிச் சென்று பெரியவாளை தரிசித்து ஆசிர்வாதம் வாங்கி வருகிறோம்! கனவு கலைந்தது. எனக்குள் சந்தோஷம். காரணம்- விடிந்தால் வியாழக் கிழமை- குரு வாரம். கனவில் குரு தரிசனம்!
விடிந்ததும், கனவைப் பற்றி நண்பர்களிடம் கூறினேன். அவர்கள், ”ராத்திரி பூரா அதையே நெனைச்சு படுத்திருப்பே. அதான் இப்படி ஒரு கனவு” என்று சிரித்தனர். அப்போது, பதற்றமாக ஓடி வந்த ரங்காச்சாரி, ”அண்ணா… ராமச்சந்திரனோட கனவு பலிச்சுடுத்து. நெல்லூர்லேருந்து வந்த பெரி யவா, நேத்து நடு ராத்திரி
கலவல கண்ணன் செட்டியார் ஸ்கூல்ல வந்து தங்கியிருக்கா ராம்!” என்றார். எனக்கு மெய் சிலிர்த்தது!
எல்லோரும் குளித்து விட்டு உடனே கிளம்பினோம். பள்ளிக்குச் சென்றதும் ஓர் இன்ப அதிர்ச்சி! கனவில் நான் கண்டது போலவே அதே இடத்தில்… அதே புன்னகையுடன் வீற்றிருந்தது அந்த நடமாடும் தெய்வம்! சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தோம். அவரிடம், ஸத் ஸங்கம்… விநாயகர் ஆலயம் எழுப்புவது… அனந்த ராமகிருஷ்ணன் பணம் கொடுத்தது… என எல்லாவற்றையும் விளக்கி, ஆசி கேட்டுப் பணிந்தோம். மகா பெரியவாள், ”கோயில் நன்னா வரும். சாயந்தரம் அந்த இடத்துக்கு வரோம்!” என்று ஆசிர்வதித்தார்.
அன்று மாலையில், திரு.வி.க. நகர் விநாயகர் ஆலயத்துக்கு, புதுப் பெரியவாளான ஜெயேந்திரர் வருகிறார் என்றும், அவரை வரவேற்கும் முறை பற்றி யும் மடத்து ஊழியர் ஒருவர் தெரிவித்தார். எங்களுக்குக் கை- கால் ஓடவில்லை. ‘புதுப் பெரியவாளை உரிய மரியாதைகளுடன் வரவேற்க வேண்டும். சங்கத்தில் நயா பைசா இல்லை. பணத்துக்கு எங்கே போவது?’ என்ற கவலைத் தொற்றிக் கொண்டது. ஆனால், ஸ்வாமிகள் நம்மூருக்கு வருகிறார் என்று தெரிந்ததும் மக்கள் பொருளுதவி செய்தனர்.
இரவு சுமார் ஏழு மணிக்கு புதுப் பெரியவாள் வந்தார். நாகஸ்வர ஒலி மற்றும் வேத கோஷங்களுடன் ‘ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர’ என்ற பக்தர் களது கோஷமும் சேர்ந்து, திரு.வி.க. நகரையே சொர்க்கபுரியாக மாற்றியது. புதுப் பெரியவாள் குடிசையில் இருந்த விநாயகரை வணங்கி விட்டு, மக்களை ஆசிர்வதித்தார். கிளம்பும்போது, ”நாளைக்கு முகாமுக்கு வாங்கோ!” என்றார். அவ்வாறே சென்றோம். மகா ஸ்வாமிகளது அனுக்கிரகத்தால், ஆசி பெற்றுத் திரும்பினோம். பிறகு, பத்திரிகைகளில் ஆசார்யாளின் அனுக் கிரகத்துடன் கோயில் கட்ட நிதி உதவி கேட்டு, விளம்பரம் வெளி யானது. நிதியும் குவிந்தது. கம்பீரமாக கோயில் எழும்பியது. வாரியார் ஸ்வாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ‘கோயில் நன்னா வரும்’ என்ற மகா பெரியவாளின் வாக்கு பலித்தது.
கோயிலில் அப்போது விநாயகரை மட்டுமே பிரதிஷ்டை செய்திருந்தோம். பின்னாளில் ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகங்கள் என்று பெரிய கோயிலாகி விட்டது. நான், திரு.வி.க. நகரில் இருந்து இடம் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதாவது இந்தக் கோயிலைப் பார்க்க நேரிடும்போது, மகா பெரியவாளின் நினைவு வந்து மனம் குதூகலமாகும்!
- பா.சி. இராமச்சந்திரன், சென்னை-19
படங்கள்: ம. அமுதன்
Courtesy: http://balhanuman.wordpress.com