telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Wednesday, 25 May 2016

பழையனூர் நீலி அம்மன். திருவாலங்காடு

ஆச்சரியம் அமானுஷ்யம் நிறைந்த பழையனூர் நீலி அம்மன் கோவில்,சிவனின் ரத்தின சபை என்று அழைக்கப்படும் திருவாலங்காடு அருகில் உள்ளது. சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் நகரத்தின் அருகே சிவனின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை என்று அழைக்கப்படும் திருவாலங்காடு அருகில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பழையனூர். ஆச்சரியம் அமானுஷ்யம் நிறைந்த பழையனூர் நீலி அம்மன் கோவில். இங்குள்ள அம்மன் நீலி அம்மன் என அழைக்கப்படுகிறாள். மிக மிக சிறிய கோவில் தான் இது. இதன் வரலாறோ சற்று பெரியது. நல்ல தங்காள், கண்ணகி என நம் மண்ணில் வாழ்ந்த பல பெண்கள் தெய்வமாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு கோவிலும் உள்ளது. இதே போல் தனக்கு துரோகம் செய்து கொன்றதன் கணவனை மறுபிறவி எடுத்து பழிவாங் கியவள்தான் பழையனூர் நீலியாவாள். ஸ்தல வரலாறு : அன்றைய காஞ்சி மாநகரில் புவனபதி என்று ஒரு அந்தணர் இருந்தார். சிறிது காலம் இல்லறம் நடத்திய அவர் புனித யாத்திரை செல்லத் திட்ட மிட்டார். அதனையடுத்து காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கிருந்த சத்தியஞானி என்பவர் புவனபதியை ஒருநாள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் விருந்து கொடுத்தவரின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விட வில்லை. சிறிது காலம் கழித்து ஊர் ஞாபகம் வரவே காஞ்சிக்கு புறப் பட்டார் புவனபதி. நவக்கியானி நானும் வருகிறேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் புவனபதி. போதாத குறைக்கு நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் நானும் வருகிறேன் என கிளம்பிவிட்டான். சொந்த ஊர் நெருங்க நெருங்க புவனபதிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு மாலைப் பொழுது திருவாலங்காட்டை அடைந்த அவர்கள் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போது தான் புவனபதிக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டார் அடுத்து ஊரைப் பார்த்து சென்றார். தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் தூக்குப் போட்டு தானும் இறந்துவிட்டான். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர். ஒரு பிறவி முடிந்தது. அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தான். அவனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தார்கள். அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றையும் கொடுத்தனர். முடிந்தவரை வடக்கு பக்கமாக போவதை தவிர்க்குமாறும் அறிவுரை கூறினர். தரிசனனுக்கு உரிய வயது வந்ததும் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தரிசனனின் அப்பா இறப்பதற்கு முன், அவனுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்கி அந்த மந்திரக் கத்தியையும் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார். இப்படி இருக்க நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் பகலில் தொட்டிலில் படுத்து உறங்குவார்கள். இரவானதும் பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள். ஊரில் இருந்து ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறப்பதைக் கண்ட ஊர்காரர்கள் ஒரு நாள் இரவு மறைந்திருந்து பார்த்தபோது நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டு விட்டது. நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டதும், அந்த பேய்க் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ள பயந்த பெற்றோர், அவற்றை தொட்டிலோடு கொண்டு போய் ஒரு வேல மரத்தில் கட்டி விட்டு வந்துவிட்டார்கள். உடனே இரு குழந்தைகளும் மீண்டும் பழைய உருக் கொண்டன. இனியும் ஒன்றாக இருந்தால் பழிவாங்க முடியாது என்று எண்ணி, பிரிந்து செல்ல முடிவெடுத்தன. நீலன் அந்த வேல மரத்திலேயே தங்கி இருக்க, நீலி திருச்செங்கோடு சென்றுவிட்டாள். ஒருநாள் பழையனூரில் உள்ள வேளாளர்கள் உழவிற்கு கலப்பை மரம் தேவைப்பட்டதால், செழிப்பான அந்த வேல மரத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள். இப்போது நீலனுக்கு இருந்த வீடும் போய்விட்டது. அந்த ஆத்திரத்தில் அலைந்துகொண்டிருந்த நீலன் அவ்வழியாக வந்த திருவாலங்காட்டு கோவில் குருக்களை அடித்து விட்டான் இது குறித்து குருக்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் தனது கணங்களில் ஒன்றை அனுப்பி நீலனின் கதையை முடித்துவிட்டார். இதை அறிந்ததும் அலறி அடித்து ஓடிவந்த நீலி, தனது சகோதரன் சாவிற்கு காரணமான வேளாளர்களையும் பழிதீர்ப்பேன் என சபதமேற்றாள். தக்க தருணத்திற்காக திருவாலங்காட்டிலேயே காத்திருந்தாள். இந்த சமயத்தில் தான் காஞ்சியில் இருந்த தரிசனனுக்கு திடீரென பழையனூர் சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மந்திரக் கத்தி இருக்கும் தைரியத்தில், யார் தடுத்தும் கேளாமல் கிளம்பிவிட்டான். தரிசனன் திருவாலங்காட்டை அடைந்ததும் அவனை நீலி பார்த்துவிட்டது. உடனே அழகான தோற்றத்தில் மாறி வந்து தரிசனனை அழைத்தாள். ஆனால் தரிசனன் இதற்கெல்லாம் மசியவில்லை. மந்திரக் கத்தி வேறு இருந்ததால் அவனை நீலியால் நெருங்கவும் முடியவில்லை. நீலியின் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. உடனே நீலி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தாள். தரிசனனின் மனைவியைப் போல் உருமாறி, ஒரு பெரிய கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக பஞ்சாயத்தை கூட்டிவிட்டாள். தன் கணவர் தன்னை பிரிந்து செல்ல நினைக்கிறார், நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று உருக்கமாக கண்ணீர் விட்டாள். தரிசனன் எவ்வளவு சொல்லியும் எடுபடவில்லை. என் கணவர் ரொம்ப கோபக்காரர், நான் பஞ்சாயத்தை கூட்டியதால் என்னைக் கொன்றாலும் கொன்று விடுவார். அவர் கையில் உள்ள கத்தியையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள். தரிசனனுக்கு உதறல் எடுத்தது. சாமி இது பேய். என்னைக் கொல்ல வந்திருக்கிறது என்று வாதாடியும் எந்த பயனும் இல்லை. தரிசனரே, தைரியமாக செல்லுங்கள். ஒருவேளை உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், இங்கு பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் 70 வேளாளர்களும் அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று அருகில் உள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் வைத்து சத்தியம் செய்துகொடுத்தனர். நீலியுடன் சென்ற தரிசனனின் கதையை நீலி முடித்துவிட்டாள். இதை அறிந்த வேளாளர்களும் சாட்சிபூதேஸவரர் ஆலயம் முன்பு தீக்குளித்து தங்கள் வாக்கை காப்பாற்றி விட்டனர். இதுதான் பழையனூர் நீலியின் கதை. இங்குள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவில், வேளாளர்கள் தீக்குளித்த இடம் , நீலி குழந்தையை காலால் மிதித்த இடம் எல்லாம் இன்றும் கோவில் அருகே தனியாக உள்ளது. அருகில் சாட்சி பூதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பழங்கால சிறிய சிவாலயம். ஆங்காங்கே சிதலமடைந்திருக்கிறது. எதிரிலேயே தீக்குளிப்பு மண்டபம் இருக்கிறது. வேளாளர்கள் தீக்குளிப்பது போன்ற சிலையை செய்து வைத்திருக் கிறார்கள். மன தைரியத்துக்கும், கணவனால் கொடுமையை அனுப விக்கும் பெண்களும் பழையனூர் நீலியை வழிபட்டால் மனதைரியம் பெறலாம். கணவன் கொடுமைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீலி அம்மன் வழிபாடு சிறுதெய்வ வழிபாடு என்றாலும், மன உறுதியுடன் இருந்து மறு ஜென்மம் வரை போராடி தன் கணவனை கொன்று பழிதீர்த்து உக்கிர தெய்வமாக உருமாறி இருக்கிறாள். தென்மாவட்டங்களில் வழிபடும் இசக்கி அம்மனாகவும் நீலி அம்மனை ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பெரியபுராணத்தில் நீலி : சம்பந்தர் தன் பதிகத்தில் நீலி கதையை பதிவு செய்ததுபோல் சேக்கிழாரும் பெரியபுராணத்தில் பதிவு செய்திருக்கிறார். ‘நற்றிரம்புரி பழையனூர்ச் சிறுதொண்டர் நவைவந் துற்றபோது தம்முயிரையும் வணிகனுக் கொடுகாற் சொற்றமெய்ம் மையுந்தூக்கியச் சொல்லையே காக்கப் பெற்றமேன் மையினிகழ்ந்தது பெருந் தொண்டை நாடு’ என விவரிக்கிறார். இதேபோன்று உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எழுதிய சேக்கிழார் புராணத்திலும் நீலி கதை வருகிறது. நீலி கதை காலம் காலமாக திரைப் படங்களிலும் கதைகளிலும் அமானுஷ்யம் கலந்த கதையாகவே சித்தரிக் கப்பட்டுள்ளது. போலியாக கண்ணீர் வடிப்பவர்களை கிராமப்பகுதிகளில் நீலிக்கண்ணீர் வடிக்காதே என்றும் கூறுவார்கள். செல்லும் வழி : சென்னையில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி செல்லும் ரயிலில் சென்றால் திருவாலங்காடு செல்லலாம் அங்குள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு இந்த நீலி அம்மன் கோவிலுக்கு செல்லலாம். மிகவும் சிறிய அளவிலான கோவில்தான் இது..

Friday, 22 May 2015

'நவகலேவரா' பண்டிகை


எந்த ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மூல தெய்வங்களின் சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றி அமைக்க மாட்டார்கள். தினமும் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர ஒலிகளினால் மேலும் மேலும் அந்த சிலைகளுக்கு சக்தி ஏறுகிறது என்பது ஐதீகம். கற்சிலைகளையோ அல்லது உலோகங்களினால் செய்யப்பட்ட சிலைகளையோ மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் என்றால் இயற்கையின் காரணத்தால் அவை உடைந்து அல்லது பழுதடைந்து போகலாமே தவிர அவை அழிவது இல்லை. அதனால்தான் ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேக விழாவில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் ஓதி ஆலய சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் செய்து ஏற்கனவே உள்ள சிலைக்கு மேலும் சக்தியூட்டுவார்கள். விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் அஷ்டபந்தனம் அதாவது கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதி லிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டு வகை மருந்துகள் கலந்த கலவையைச் சாற்றுவது வழக்கம். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டு வகை மருந்துகளை பூசுவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர். எந்த ஆலயத்தில் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தனம் சாற்றி விக்ரகங்களை அதன் மீது பிரதிஷ்டை செய்துள்ளார்களோ அந்த ஆலயங்களில் மட்டுமே சாதாரணமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்து விட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி அந்த பீடத்திலேயே அதே ஸ்வாமி சிலையை மீண்டும் ஸ்தாபனம் செய்தற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். அதே சமயத்தில் பீடத்தில் இருந்து எடுத்து மீண்டும் வைக்கப்படும் விக்ரகங்களுக்குப் பதில் வேறு புதிய விக்ரஹத்தை அங்கு ஸ்தாபனம் செய்ய மாட்டார்கள். இயற்கையினால் மூலவரின் சிலை பழுதடைந்து போனால் ஒழிய மூலவரை மாற்றி அமைக்க மாட்டார்கள். ஆனால் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ள மூலவரின் சிலைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு புராதன பழக்கம் பூரி ஜகன்னாதரின் ஆலயத்தில் மட்டுமே தொடர்ந்து கொண்டு உள்ளது என்பது வியப்பான செய்தி ஆகும். 12 அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு வருடத்தில் 'அதிக மாசம்' அல்லது 'ஆஷாட' எனும் மாதம் இருமுறை சேர்ந்து வரும் (ஜூன் மற்றும் ஜூலை மாத இடையில்). அதுவே முக்கியமான வருடமாகக் கருதி அந்த ஆண்டில் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூல மூர்த்திகளாக உள்ள ஜகன்னாதர், சுபத்திரை,ஜகன்னாதரின் சகோதரரான பாலபத்திரர் மற்றும் சுதர்சனம் (விஷ்ணுவின் சக்ரம்) எனும் நான்கு பேர்களது சிலைகளையும் அதே மாதிரியான புதிய சிலையை வடிவமைத்து 'நவகலேவரா' என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையில் மாற்றி அமைப்பார்கள். 1996 ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற
19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஆண்டு அதாவது 2015 ல் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. பல்வேறு பஞ்சாங்கங்கள், ஆலய வரலாறு, ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்களின் கூற்றின்படி 1575 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை இருபத்தி மூன்று முறை இரட்டை 'ஆஷாட' மாதங்கள் வந்த வருடங்களில் நவகலேவரா பண்டிகை நடைபெற்று இந்த ஆலயத்தில் சிலைகள் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிகின்றது. ஆகவே இந்த வருடம் நடைபெறும் நவகலேவரா பண்டிகை இருபத்தி நான்காம் முறை நிகழும் பண்டிகை ஆகும். பன்னிரண்டு (12) அல்லது பத்தன்பொது (19) ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நபகலேபரா 65 நாட்கள் தொடரும் பண்டிகை ஆகும். பூரி ஆலயத்தில் உள்ள நான்கு தெய்வங்களும் மரத்தில் வடிவமைக்கப்பட்டவை. மரம் காலப்போக்கில் அழிவுறும் தன்மைக் கொண்டது. ஆகவேதான் இந்த சிலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றனவாம். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த காலத்தில் பாரதம் என அழைக்கப்பட்ட நம் நாட்டில் பல்வேறு ஆலயத்திலும் உள்ள மூலவர்களுடைய அல்லது உற்சவ மூர்த்திகளின் சிலைகள் அனைத்துமே கற்பாறைகள், கரும்கற்கள், நவபாஷணங்கள், சுடப்பட்ட மண் கலவை, அல்லது சில குறிப்பிட்ட உலோகங்களில் மட்டுமே செய்யப்பட்டு உள்ளன. கிராம தேவதைகள் அல்லது கிராம தெய்வங்களின் சிலைகள் கூட மண்ணினாலும், கல்லினாலும் செய்யப்பட்டு இருக்க, அவை அனைத்துக்கும் மாறாக பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மட்டுமே மரத்திலான சிலைகள் சன்னதியில் உள்ளன. மனிதர்களுக்கு இறப்பும் பிறப்பும் உள்ளதைப் போலவே தெய்வங்களுக்கும் இறப்பும் பிறப்பும் உள்ளது என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டவே இந்த நியதியை விஷ்ணு பகவான் உருவாக்கி வைத்தாராம். சிற்பக் கலைகளைப் பற்றி விவரமாக எடுத்துரைக்கும் புராண நூலான 'ஷில்பசாஸ்திரா' என்பதின்படி ஆலயங்களில் வடிவமைக்கப்படும் சிலைகளுக்கு சில குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே உயிர் இருக்குமாம். ரத்தினக் கற்களினால் மற்றும் இயற்கைக் கற்களினால் செய்யப்படும் சிலைகளின் ஆயுள் 10,000 வருடங்கள், உலோகத்தினால் செய்யப்படுபவைகளுக்கு 1000 வருடங்கள், மண் சிலைகள் ஒரு வருடம் மற்றும் மரங்களில் செய்யப்பட்டவை 12 வருடங்கள் ஜீவன் உள்ளதாக இருக்கும் என்பதாக கூறப்பட்டு உள்ளது. நபகலேபரா என்ற இந்த வைபவம் ஒரு விதத்தில் பார்த்தால் ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் போலவே தோன்றும் என்றாலும், இதற்கும் கும்பாபிஷேகத்துக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. மரத்தில் வடிவமைக்கப்பட்ட தெய்வ சிலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. பிற ஆலயங்களில் செய்யப்படுவதைப் போல கும்பாபிஷேகம் செய்து பழைய சிலையையே மீண்டும் பீடத்தில் அமர்த்தி வைக்காமல், கும்பாபிஷேகம் போன்ற வைபவத்தை செய்து அதன் முடிவில் புதிய சிலையை, தெய்வீக தன்மைகளைக் கொண்ட, வேப்ப மரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய சிலையை, பழைய சிலைகளில் உள்ள சக்தியை வெளியில் எடுத்து புதிய சிலைகளில் அவற்றை செலுத்தி, அவற்றை ஆலய பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்வதை நபகலேபரா என்கிறார்கள். பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த வைபவத்தில் முக்கியமானவை:- ஆஷாட மாதத்தில் திருவிழா துவக்கம் சிலைகளுக்கான மரத்தைக் கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை மரங்களைக் கண்டு பிடித்து அதை எடுத்து வருவது சிலை வடிவமைப்பு சிலைக்குள் பிரும்மாவின் சக்தியை செலுத்துதல் சிலைகளை தேரில் ஏற்றி ஊர்வலம் செல்லுதல் தேரை ஆலயத்துக்கு திரும்பக் கொண்டு வருதல் சிலைகளுக்கு அழகூட்டி ஆபரணங்களை அணிவித்தல் பிரசாதம் படைத்தல் சிலைகளை மீண்டும் சன்னதியில் கொண்டு சேர்த்தல் பழைய சிலைகளை மண்ணில் போட்டு புதைத்து விடுவது மனிதர்களுக்கு இறப்பும் பிறப்பும் உள்ளதைப் போலவே தெய்வங்களுக்கும் உள்ளது என்ற தத்துவத்தைக் எடுத்துக் காட்டுவதைப் போன்ற இந்தப் பழக்கம் ஒரிஸ்ஸா மானிலத்தில், நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த பூரி ஜகன்னாத் ஆலயத்தில் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள கடவுள் பூமியிலே உயிரோடு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் பழைய உடலை துறந்து இன்னொரு உடம்பில் அவர் குடி புகுந்து கொள்வதான ஐதீகத்தின் அடிப்படையில் நபகலேபரா திருவிழா நடைபெறுகிறது. நபா என்றால் 'புதிய' என்றும் கலேபரா என்றால் 'உடல்' என்பதாகவும் அர்த்தமாம். அதாவது பல தெய்வங்கள் பல்வேறு காரணங்களினால் பூமியிலே அவதரிக்கின்றன. தெய்வமே ஆனாலும் பூமியிலே அவதரிக்கும் எந்த உடலுக்கும் அழிவுண்டு என்றும் அதில் உள்ள தெய்வீக ஆத்மா புதிய உடலில் புகுந்து கொண்டு புதுத் தோற்றத்தை அடைந்தாலும் அதனுள் உள்ள ஆத்மாவின் தெய்வீகத் தன்மை மாறுவதில்லை என்பதை உணர்த்தவும், தம்முடைய தெய்வீக தத்துவத்தை நிரூபிக்கவும் புதிய உடலோடு தோன்றி ஆலயத்திலே அமர்கிறார் பூரி ஜகன்னாதர். எப்படி ஒருவர் தன்னுடைய உடைகளை மாற்றிக் கொள்கின்றாரோ அப்படித்தான் பூரி ஸ்ரீ ஜகன்னாதரும் தமது குடும்பத்தினருடன் நபகலேபரா விழாவின்போது பழைய உடலை துறந்து புதிய உடலில் குடி புகுந்து கொள்கிறார் என்கிறார்கள். இதன் பின்னணி கதை என்ன? ஆகவே முதலில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டதாக நம்பப்படும், சத்யயுகத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் எழுந்த அற்புதமான கதையைப் பார்க்கலாம். thanks to Santhipriya's pages

Monday, 28 July 2014

Brahma Gayatri Mantra


OM BRAHMA DEVAAYA NAMO NAMAHA
Sri Brahma Devar DarisanamOM BRAHMA DEVAAYA NAMO NAMAHA. Lord Brahma Mantras : Chanting the Brahma Mantra helps us to fulfill the four aims of life righteousness, Prosperity, Pleasures and Liberation. Brahma Mantras are also good for those who wish to gain knowledge. Given below are the Mantras of Lord Brahma. Brahma Gayatri Mantra Om Chathur mukhaya VidmaheHamasaroodaya DheemaheThanno Brahma Prachodayath. Om Vedathmanaya vidmahe,Hiranya Garbhaya Dheemahi,Thanno Brahma prachodayath. Brahma Bija Mantra "Aum Satchit Ekam Brahma" “Om Eim Hrim Shrim Klim Sauh Satchid Ekam Brahma”

Sunday, 13 April 2014

மகா ஸ்வாமிகளின் ஆசி


கோயில் நன்னா வரும்!’ — மகா ஸ்வாமிகளின் ஆசி காஞ்சி மகா பெரியவரது கருணை கடாட்சத்தில் திளைக்கச் செய்த- எனது வாழ்வில் நிகழ்ந்த ஓர் அற்புத சம்பவம்: சுமார் 45 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் குடும்பத்துடன் சென்னை பெரம்பூரில் உள்ள திரு.வி.க. நகரில் வசித்து வந்தோம். அந்தப் பகுதியில் சிம்சன் குரூப், பி-அண்ட்-சி மில் மற்றும் அரசு ஊழியர்கள் குடியிருந்தனர். எங்களுக்கென குடியிருப்போர் சங்கம் ஒன்று இருந்தது. எனினும், ஸத் சங்கம் ஒன்று ஆரம்பிக்க விரும்பினோம். ஸத் ஸங்கம் துக்கம் ப்ரஸயமதி… அதாவது, சாதுக்கள் மற்றும் நல்லவர்கள் கூடும் சங்கம், துக்கத்தை தணிக்கும் என்பர். அதற்கேற்ப நாங்கள் துவக்கிய ஸத் சங்கம் மூலம் ஏழை மாணவர்களுக்கும், துன்பத்தில் உழல்பவர்களுக்கும் சிறு சிறு உதவிகள் செய்து வந்தோம். தவிர, சனிக்கிழமைகளில் அன்பர்கள் சிலரது இல்லங்களில் அனுமன் திருவுருவப் படத்தை வைத்து, நாமசங்கீர்த்தனம் செய்வதும் வழக்கம். இந்த நிலையில், அப்போது திரு.வி.க. சிலை அருகே இருந்த காலி இடத்தில், விநாயகர் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களில் சிலர் விரும்பினர். அதற்காக குழு அமைத்து, நிதி திரட்ட தீர்மானித்தோம். குழுவில், நான் உட்பட… சுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி ஐயர், னிவாசன், ரங்காச்சாரி, மணி, எத்திராஜ், தரணிபதி, கோதண்டபாணி, பாளே கெட்டே பத்மனாப ராவ் என்று பலரும் இடம் பெற்றோம். நிதி திரட்டும் பணி துவங்கியது. முன்னதாக காலியிடத்தில், குடிசை அமைத்து உள்ளே விநாயகரை வைத்து வழிபட ஆரம்பித்தோம். நாட்கள் கழிந்தன. போதுமான நிதி கிடைக்க வில்லை. எங்கள் சேர்மனும், சிம்சன் குரூப் அதிபருமான அனந்தராம கிருஷ்ணனை சந்தித்து ஆலய திருப்பணி குறித்து விளக்கினோம். அவர், ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்தார். அந்தக் காலத்தில் இது பெரிய தொகை. அனந்த ராம கிருஷ்ணன் பணம் கொடுத்த நேரம், நிதி மளமளவென்று சேர்ந்தது. எனினும், கோயில் கட்டுவதற்கு அது போதுமானதாக இல்லை. குழுவில் இருந்த அன்பர் ஒருவர், ”காஞ்சி புரம் போய் மகா ஸ்வாமிகளை தரிசிப்போம். அவர் அனுக்கிரகம் பண்ணி ஆசிர்வதித் தால், பெரிய பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு நிதி திரட்டலாமே!” என்றார். எங்களுக்கும் அது சரி என்றே பட்டது. காஞ்சி மடத்தை தொடர்பு கொண்டோம். ”பெரியவா வட தேச யாத்திரை போயிருக்கா. மடத்துக்கு எப்போ திரும்புவாள்னு தெரியலே. ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணுங்கோ… பெரியவாகிட்டேருந்து சேதி வந்தா சொல்றோம்!” என்றனர். தொலைதொடர்பு வசதிகள் விரிவடையாத காலம் அது. அதையும் மீறி, காஞ்சி மடத்துக்கு அவ்வப்போது சிரமப்பட்டு போன் போட்டு, கனெக்ஷன் பெற்று விசாரித்துக் கொண்டிருந் தோம். மகா பெரியவாள், சென்னை வருவதாக எதுவும் தகவல் இல்லை. அன்று புதன்கிழமை. இரவு உறக்கத்தில் ஒரு கனவு: மகா ஸ்வாமிகள் நெல்லூரில் இருந்து புறப்பட்டு பெரம்பூர் வழியாக வந்து, ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டியார் பள்ளி யில் முகாமிட்டிருப்பதாகத் தகவல் வர… நாங்கள் ஓடோடிச் சென்று பெரியவாளை தரிசித்து ஆசிர்வாதம் வாங்கி வருகிறோம்! கனவு கலைந்தது. எனக்குள் சந்தோஷம். காரணம்- விடிந்தால் வியாழக் கிழமை- குரு வாரம். கனவில் குரு தரிசனம்! விடிந்ததும், கனவைப் பற்றி நண்பர்களிடம் கூறினேன். அவர்கள், ”ராத்திரி பூரா அதையே நெனைச்சு படுத்திருப்பே. அதான் இப்படி ஒரு கனவு” என்று சிரித்தனர். அப்போது, பதற்றமாக ஓடி வந்த ரங்காச்சாரி, ”அண்ணா… ராமச்சந்திரனோட கனவு பலிச்சுடுத்து. நெல்லூர்லேருந்து வந்த பெரி யவா, நேத்து நடு ராத்திரி கலவல கண்ணன் செட்டியார் ஸ்கூல்ல வந்து தங்கியிருக்கா ராம்!” என்றார். எனக்கு மெய் சிலிர்த்தது! எல்லோரும் குளித்து விட்டு உடனே கிளம்பினோம். பள்ளிக்குச் சென்றதும் ஓர் இன்ப அதிர்ச்சி! கனவில் நான் கண்டது போலவே அதே இடத்தில்… அதே புன்னகையுடன் வீற்றிருந்தது அந்த நடமாடும் தெய்வம்! சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தோம். அவரிடம், ஸத் ஸங்கம்… விநாயகர் ஆலயம் எழுப்புவது… அனந்த ராமகிருஷ்ணன் பணம் கொடுத்தது… என எல்லாவற்றையும் விளக்கி, ஆசி கேட்டுப் பணிந்தோம். மகா பெரியவாள், ”கோயில் நன்னா வரும். சாயந்தரம் அந்த இடத்துக்கு வரோம்!” என்று ஆசிர்வதித்தார். அன்று மாலையில், திரு.வி.க. நகர் விநாயகர் ஆலயத்துக்கு, புதுப் பெரியவாளான ஜெயேந்திரர் வருகிறார் என்றும், அவரை வரவேற்கும் முறை பற்றி யும் மடத்து ஊழியர் ஒருவர் தெரிவித்தார். எங்களுக்குக் கை- கால் ஓடவில்லை. ‘புதுப் பெரியவாளை உரிய மரியாதைகளுடன் வரவேற்க வேண்டும். சங்கத்தில் நயா பைசா இல்லை. பணத்துக்கு எங்கே போவது?’ என்ற கவலைத் தொற்றிக் கொண்டது. ஆனால், ஸ்வாமிகள் நம்மூருக்கு வருகிறார் என்று தெரிந்ததும் மக்கள் பொருளுதவி செய்தனர். இரவு சுமார் ஏழு மணிக்கு புதுப் பெரியவாள் வந்தார். நாகஸ்வர ஒலி மற்றும் வேத கோஷங்களுடன் ‘ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர’ என்ற பக்தர் களது கோஷமும் சேர்ந்து, திரு.வி.க. நகரையே சொர்க்கபுரியாக மாற்றியது. புதுப் பெரியவாள் குடிசையில் இருந்த விநாயகரை வணங்கி விட்டு, மக்களை ஆசிர்வதித்தார். கிளம்பும்போது, ”நாளைக்கு முகாமுக்கு வாங்கோ!” என்றார். அவ்வாறே சென்றோம். மகா ஸ்வாமிகளது அனுக்கிரகத்தால், ஆசி பெற்றுத் திரும்பினோம். பிறகு, பத்திரிகைகளில் ஆசார்யாளின் அனுக் கிரகத்துடன் கோயில் கட்ட நிதி உதவி கேட்டு, விளம்பரம் வெளி யானது. நிதியும் குவிந்தது. கம்பீரமாக கோயில் எழும்பியது. வாரியார் ஸ்வாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ‘கோயில் நன்னா வரும்’ என்ற மகா பெரியவாளின் வாக்கு பலித்தது. கோயிலில் அப்போது விநாயகரை மட்டுமே பிரதிஷ்டை செய்திருந்தோம். பின்னாளில் ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகங்கள் என்று பெரிய கோயிலாகி விட்டது. நான், திரு.வி.க. நகரில் இருந்து இடம் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதாவது இந்தக் கோயிலைப் பார்க்க நேரிடும்போது, மகா பெரியவாளின் நினைவு வந்து மனம் குதூகலமாகும்! - பா.சி. இராமச்சந்திரன், சென்னை-19 படங்கள்: ம. அமுதன் Courtesy: http://balhanuman.wordpress.com